14 பொருட்களுக்கு புதிய புவிசார்க்…

டெல்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில் கருப்பு சீரகம், சத்திஸ்கரின் சீரகப் பூ, ஒடிஸா மாநிலத்தில் உள்ள கந்தமல் பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சள் என 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI – Geographical Identification Tag) வழங்கி இருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்துறை மற்றும் உள் வர்த்தகத் துறை (Department for Promotion of Industry and Internal Trade – DPIIT) புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களை பட்டியல் இட்டிருக்கிறது. கர்நாடகத்தின் கூர்க் பகுதிகளில் தயாரிக்கப்படும் அரபிகா காபி, கேரளத்தில் வயநாடு பகுதிகளில் தயாரிக்கப்படும் ரொபெஸ்டா காபி, ஆந்திரப் பிரதேசத்தின் அரகு பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் அராபிகா காபி, கர்நாடகத்தில் தயாரிக்கப்படும் சிரிசி சுபாரி, ஹிமாச்சலத்தில் தயாரிக்கப்படும் ஹிமாச்சல மிளகாய் எண்ணெய் போன்றவைகளும் இந்த புதிய 14 பொருட்களில் அடக்கம்.

பொதுவாக இப்படி ஊர் பெயருடன் தயாராகும் பொருட்களுக்கு என்று ஒரு தனி விலை சந்தையில் கிடைக்கும். அதற்கு காரணம் அந்த பொருளின் தரம் மற்றும் நம்பகத் தன்மை. இப்படி புவிசார்க் குறியீடுகளைக் கொடுப்பதால் மற்ற யாரும் அந்த பெயரைப் பயன்படுத்தி போலி பொருட்களை விற்க முடியாது. இப்படி பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுப்பதால் அந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பு கிடைக்கிறது.


விவசாயப் பொருட்கள், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள், கை வேலைப்பாடுகள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே இப்படி புவிசார்க் குறியீடுகள் வழங்குவார்கள். அதுவும் இந்த ரக பொருட்கள் அவர்கள் பகுதிகளில் மட்டும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இப்படி இந்தியாவின் காஷ்மீர் பாஷ்மினா சால்வைகள், நாக்பூர் ஆரஞ்சுகள், திருப்பதி லட்டு, டார்ஜிலிங் டீ என பல பொருட்களுக்கு ஏற்கனவே இந்தியாவில் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டிருக்கிறதாம். இந்தியாவில் முதல் முறையாக 2004-ல் புவிசார்க் குறியீடு பெற்றது டார்ஜிலிங் டீ தான். அதன் பின் இன்று வரை 344 இந்திய பொருட்களுக்கு புவிசார்க் குறியீடுகள் வழங்கி இருக்கிறார்களாம்

இந்த புவிசார் குறியீட்டை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கே தொடுக்கலாமாம். ஒரு முறை வழங்கப்படும் புவிசார்க் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின் மீண்டும் நீட்டிப்பு செய்யப்படுமாம். குறிப்பாக புவிசார் குறியீடு உலக வர்த்தக அமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டது.


Leave a Reply