பான் – ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு வரும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூன்மாத நிலவரப்படி, நம் நாட்டில் 50.95 கோடி பேரிடம், வருமான வரி கணக்கு அட்டையான ான் கார்டு உள்ளது. பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. பலர் இணைக்க முன்வராததால், அதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே இருந்தது.

 

இதுவரை 32.71 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. பான் மற்றும் ஆதார் இணைப்பு வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிக்க உதவும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு செயல்படாதவை என்று அறிவிக்கப்படுவதோடு, ரூ.10,000 அபராதம் செலுத்த நேரிடும் எனவும் வருமான வரித்துறையினர் எச்சரித்திருந்தனர்.

 

இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தற்போது வருமான வரித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 

கடைசி நாளான நேற்று, இணைய தளத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், அதன் செயல்பாடு முடங்கியது. எனவே, பெரும்பாலானோரால் இணைக்க முடியவில்லை. மேலும், காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply