“முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது” நாமக்கல்லில் ரூ. 5.25 ஆக நிர்ணயம்!!

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2017-ல் ஒரு முட்டை ரூ. 5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில் இன்று விலையேற்றம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

 

பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் சைவமாகி விடுவர். இதனால் முட்டை, கறிக்கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றின் விலை வீழ்ச்சியடைவதுதான் வழக்கம். ஆனால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்திக்கு முட்டை, இறைச்சி போன்றவை நல்லது என கூறப்பட்டதால் கடந்த சில மாதங்களாகவே இவற்றின் நுகர்வு அதிகரிக்க, விலையும் கிடு கிடுவென உயர்ந்தே வருகிறது.

 

இதில் முட்டை விலை தான் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் ஒரே நாளில் 25 காசுகள் அதிகரித்து ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இன்றோ மேலும் 20 காசுகள் உயர்ந்து ரூ.5 .25 காசுகள் என நிர்ணயிக்கப்பட்ட வரலாற்றில் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.

 

இப்படி முட்டை விலை மொத்த விலையில் ரூ.5.25 ஆக உயர்ந்த நிலையில், சில்லறை விலையில் ரூ.6 முதல் ரூ.6.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழி விலையும் கடந்த சில மாதங்களாக ரூ.200 என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply