“ஜெட் வேகத்தில் இறக்குமதியான எகிப்து வெங்காயம்” – திருச்சி, திண்டுக்கல்லில் ரூ 110-க்கு விற்பனை!!
வெங்காயம் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் திருச்சி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வந்து சேர, விலையும் சற்று குறைந்துள்ளது.
வெங்காயம்… உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பது பழைய கதை. இப்போது இதன் விலையைக் கேட்டாலே, ஒட்டு மொத்தமாக அனைவரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்பது போல், கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை நிலவரமும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.
50 ரூபாய் வரை கட்டுப்படியாகும் விலையில் விற்று வந்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை 10 நாட்களுக்கு முன்பு |00 ரூபாயாக அதிகரித்தது. அதன் பின் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் விலை உயர்ந்து 200 ரூபாயை தாண்டியதில், ஒட்டு மொத்த இந்திய மக்களும் பதறித்தான் போய் விட்டனர். இப்படியே போனால் 300 ரூபாயையும் தாண்டிவிடும் எனவும் அச்சம் நிலவியது. நாடாளுமன்றத்திலும் வெங்காயம் பிரச்னை எதிரொலித்தது.
இதனால் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்து, ஜனவரி மாத மத்தியில் வந்து சேரும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், எகிப்தில் இருந்து ஏற்கனவே மும்பைக்கு இறக்குமதியான வெங்காயம் இருப்பில் உள்ள தகவல் அறிந்த திருச்சி, திண்டுக்கல் மொத்த வியாபாரிகள் மும்பைக்கு பறந்தனர். ஜெட் வேகத்தில் அந்த வெங்காயத்தை கொள்முதல் செய்து இன்று திருச்சி, திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனையையும் ஆரம்பித்தனர்.
திருச்சிக்கு 40 டன், திண்டுக்கல்லுக்கு 20 டன் எகிப்து வெங்காயம் வந்த நிலையில் ரூ.110 விலையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான நிலையில், எகிப்து வெங்காயம் ரூ.110 க்கு விற்கப்பட்டதால் திண்டுக்கல், திருச்சிவாசிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




