“உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக வழக்கு” – உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியுள்ளது.

 

முதலில் 36 மாவட்டங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வார்டு மறு வரையறை செய்யாமலும், இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய திமுக, தேர்தலுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மாவட்ட பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.

 

இதனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய மறுநாளே 27 மாவட்டங்களில் தேர்தலுக்கான புதிய அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால் இந்த தேர்தல் அறிவிப்புக்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் நீதிமன்றத்தை நாடப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அறிவிக்காமல், தேர்தல் தேதியை அவசரம் அவசரமாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் , மதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நாளை மறு நாள் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தடை கோரி மீண்டும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனால் தேர்தல் நடைபெறுமா? தடை வருமா? என்ற குழப்பமும், சந்தேகமும் இன்னும் நீடிக்கிறது. இதனால் இன்று வேட்பு மனுத்தாக்கலும் விறுவிறுப்பின்றி மந்தமாகவே காணப்படுகிறது.


Leave a Reply