--- --:--:-- --

தகாத உறவு என்ற விபரீதம்! * கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. * கத்தியால் சரமாரியாக குத்தி கதறி அழுத கணவன்!

ggjfjf

சை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்… ஆனால், மொபைல் போன் திரைக்குப் பின்னால் அரங்கேறும் ‘கள்ளக் காதல்’ மோகமோ ஆயுள் முழுமைக்குமான நிம்மதியைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது.

நெஞ்சில் ஈரமும், நேர்மையும் உள்ள எந்தவொரு மனிதனையும் ரத்தக் கொதிப்பில் கொந்தளிக்கச் செய்யும் ஒரு பயங்கரம் தான் தஞ்சை பட்டுக்கோட்டையில் அரங்கேறியிருக்கிறது. ‘திருமணம் தாண்டிய உறவு தப்பில்லை’ என்ற நவீன யுகத்தின் வக்கிர மனோபாவமும், பொறுப்பற்ற மொபைல் போன் கலாச்சாரமும் எப்படி ஒரு நடுத்தரக் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதன் சாட்சி தான் இந்த ரத்தச் சரித்திரம்.

 

ஒருபக்கம் கத்தியால் சிதைக்கப்பட்ட முகத்தோடு மரணப் போராட்டம் நடத்தும் மனைவி… மறுபக்கம் தன் நான்கு வயதுப் பச்சைக் குழந்தையோடு ‘மரண வாக்குமூல’ வீடியோ வெளியிட்டுவிட்டுச் சிறைக்கம்பி எண்ணும் கணவன்… இடையில் அநாதையாய் தவிக்கும் அந்தப் பாலகன்! சமுதாயத்தின் முகத்தில் சாட்டையடி கேட்கும் அந்தப் பகீர் பின்னணி இதோ…

 

பட்டுக்கோட்டையில் ஒரு ரத்த சரித்திரம்!

 

பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதி அது. அன்றைய நள்ளிரவு அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த வாடகை வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் மரண ஓலம் கேட்கிறது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள், வீட்டின் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கிறது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து பதறிப்போன மக்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கே காத்திருந்தது பேரதிர்ச்சி.

 

அங்கே 35 வயதுடைய அட்சயா என்ற பெண் வாய், உதடு, கன்னம், கை என உடல் முழுவதும் கத்திக் கீறல்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது வேறு யாருமல்ல… அவரோடு ஏழு அடி நடந்து, இல்லற பந்தத்தில் இணைந்த கணவன் தர்மராஜா (40) தான்! இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீஸார் பாய்ந்து வந்து அக்‌ஷயாவை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

படுக்கையறை வரை சென்ற துரோகம்!

 

யார் இந்த தர்மராஜா? என்ன நடந்தது இவர்களின் வாழ்க்கையில்? தஞ்சை மாவட்டம் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜாவுக்கும், அட்சயாவுக்கும் திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பிழைப்புக்காக திருச்சிக்குச் சென்ற இடத்தில் தான் அந்த விபரீதம் அரங்கேறியிருக்கிறது. திருச்சியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த ஒரு பிரபல சலூன் கடையில் வேலை பார்த்து வந்த ஜோஷ் என்ற வாலிபருடன் அட்சயாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

 

ஒருநாள் அட்சயா தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, மனைவியைப் பார்க்க ஆசையோடு சென்ற கணவன் தர்மராஜாவுக்குப் பேரிடி காத்திருந்தது. வீட்டின் தனி அறையில் ஜோஷ் உடன் அட்சயா தனிமையில் இருந்ததைக் கண்டு தர்மராஜா ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார். உடனே தன் மொபைல் போனை எடுத்து, ஜோஷ் அந்த அறையை விட்டு வெளியே வருவதை வீடியோவாகப் பதிவு செய்தார்.

 

தன் கண்முன்னே நடந்த துரோகத்தைக் கேட்டு கணவன் கதறியபோது, அட்சயா மிகச் சாதாரணமாக, “என்னாச்சு இப்ப… ஏன் இப்படி கத்தற?” என்று ஒன்றுமே நடக்காதது போலக் கேட்டுள்ளார். லாரியை ஓட்டி, இரவு பகலாகக் கண்விழித்துச் சம்பாதிக்கும் கணவனுக்கு, ஒரு பெண் கொடுக்கும் பரிசு இந்தத் துரோகம் தானா?

 

நெஞ்சை உலுக்கிய மரண வாக்குமூல வீடியோ!

 

அதன் பின்னர் குடும்பத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, பட்டுக்கோட்டைக்குக் குடித்தனம் மாற்றியுள்ளனர். ஆனால், தர்மராஜாவின் மனதில் சந்தேகம் தீயாக எரிந்துகொண்டே இருந்தது. அக்‌ஷயாவின் நடத்தையில் மீண்டும் சந்தேகம் ஏற்படவே, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வெடித்தது. அந்தத் தீ தான், அன்றைய நள்ளிரவில் காய்கறி நறுக்கும் கத்தியாக மாறி அக்‌ஷயாவின் முகத்தைக் கிழித்துப் போட வைத்தது.

 

மனைவியைக் கொடூரமாகக் காயப்படுத்திவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தன் 4 வயது மகனைத் தூக்கிக்கொண்டு தர்மராஜா தப்பியோடினார். போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்த நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னால் தர்மராஜா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.

அந்த வீடியோவில் “காவல் துறையினருக்கு வணக்கம். என் குடும்பமே நாசமாகிடுச்சு… இதுக்கு அந்த ஜோஷ் தான் காரணம். அவரை கைது செய்யணும். இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் என் மகனும் உயிரோட இருக்க மாட்டோம்” என்று அவர் கண்ணீரோடு பேசியது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

 

அதிர்ஷ்டவசமாக போலீஸார் தீவிரமாகத் தேடி தர்மராஜாவைக் கண்டுபிடித்துக் கைது செய்து, குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். இணையத்தில் இந்த வீடியோவைப்பார்த்த பலரும், கணவருக்குத் துரோகம் இழைத்த அக்‌ஷயாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

 

கலாச்சாரச் சீரழிவா, நவீன மோகமா? என்ன தீர்வு?

 

இந்தச் சம்பவத்தை வெறும் அன்றாட க்ரைம் செய்தியாக மட்டும் கடந்து போய்விட முடியுமா? நெஞ்சில் ஈரமுள்ள எந்தவொரு குடிமகனுக்கும் இந்தச் செய்தி ரத்தக் கொதிப்பைத்தான் ஏற்படுத்தும். திருமணம் என்ற புனிதமான பந்தத்திற்கு இன்று என்ன மதிப்பு இருக்கிறது? “திருமணம் செய்துகொண்டாலும், இன்னொருவருடன் உறவில் இருப்பதில் தவறில்லை” என்ற ஒரு வக்கிரமான, ஆபத்தான மனோபாவம் இன்றைய இளம் தலைமுறையினரில் சிலரிடம் நச்சுப் பாம்பாகத் தலைதூக்கி ஆடுகிறது.

 

இன்றைய மொபைல் போன் கலாச்சாரம் பல நன்மைகளைத் தந்தாலும், சில பெண்களுக்கு அது சுயவிளம்பர மோகமாக மாறிப்போயிருக்கிறது. குடும்பப் பொறுப்பில்லாமல், கணவனின் உழைப்பை மதிக்காமல், இன்ஸ்டாகிராமிலும், முகநூலிலும் தங்களது உடல் அங்கங்கள் தெரியும்படி ‘கவர்ச்சி ரீல்ஸ்’ போடுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த ரீல்ஸை பார்த்துவிட்டு வரும் அநாமதேய வட்ஸ்அப் ‘ஹலோ’வில் தொடங்கி, தவறான வழிக்குச் செல்லத் தூண்டுகிறது இந்த நவீன கலாச்சாரம்.

 

பொறுப்பற்ற கணவன்மார்கள், குடிபோதையில் குடும்பத்தைக் கவனிக்காத ஆண்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக, ஒரு பெண் தன் கற்பையும் குடும்பத்தையும் அடகு வைப்பது எந்த விதத்தில் நியாயம்? வறுமையிலும் நேர்மையாக வாழும் எத்தனையோ பெண்களுக்கு மத்தியில், இதுபோன்ற பெண்களின் செயல்கள் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன.


திருப்பூரில் வேரூன்றும் நச்சு வேர்கள்!

இந்தக் கொடுமை தஞ்சையோடு முடிந்துவிடுவதில்லை. குறிப்பாகத் திருப்பூர், கோவை, சென்னை போன்ற வெளி மாவட்ட, வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் குவியும் தொழில் நகரங்களில், இந்தத் தகாத உறவுப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

 

நெருக்கடியான வாடகை வீடுகளில், கணவன் ஒரு ஷிப்ட் வேலைக்குச் செல்ல, மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடனோ அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள வாலிபர்களுடனோ ஏற்படும் ‘கள்ளக் காதல்’, இறுதியில் கொலையிலோ அல்லது தற்கொலையிலோ தான் முடிகிறது. இத்தகைய போக்கு, வருங்காலத்தில் குடும்ப அமைப்பிலும், சமுதாயத்திலும் மிக மோசமான, மீட்டெடுக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.

 

சமுதாயமே… அரசே தீர்வை தர வேண்டும்!

 

இந்த அவல நிலையைத் தடுத்து நிறுத்த நாம் சமுதாயத்தின் மீதும், அரசின் மீதும் சாட்டையடி கேள்விகளை எழுப்பியே தீர வேண்டும்:

 

பெற்றோர்களே, சமூகமே… துரோகத்தின் முடிவில் கணவன் சிறைக்குப் போகிறான், மனைவி மருத்துவமனையிலோ அல்லது சுடுகாட்டிலோ கிடக்கிறாள். இடையில் மாட்டித் தவிக்கும் அந்த 4 வயதுப் பச்சைக் குழந்தையின் எதிர்காலம் என்ன? ஏதுமறியாத அந்த அப்பாவிப் பாலகன் என்ன பாவம் செய்தான்? அவனது சிதைந்த எதிர்காலத்திற்கு யார் பதில் சொல்வது? இருவருமே இதை உணராதது ஏன்?

 

தமிழக அரசே… வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கியிருக்கும் தற்காலிகத் தொழிலாளர்களின் பின்னணியைக் கண்காணிக்கவும், அவர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யவும் முறையான கட்டமைப்பு ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை?

 

தொண்டு நிறுவனங்களே… குடும்ப வன்முறைக்கு எதிராகப் மேடை தோறும் முழங்கும் நீங்கள், குடும்பங்களைச் சீரழிக்கும் இந்தத் தகாத உறவுகளுக்கு எதிராகவும், மொபைல் போன் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரிய கவுன்சிலிங் (ஆலோசனை) வழிகாட்டுதல்களை வழங்க முன்வர வேண்டும்.

விழித்துக்கொள் தமிழகமே! இல்லறம் காக்கப்பட வேண்டும்

 

இனிமேலும் நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆபத்து நம் வீட்டு வாசற்படி வரை வந்துவிட்டது. ‘சிங்கப்பெண் படை’ போல, இல்லறத்தைக் காக்க அரசும், காவல்துறையும் இணைந்து சிறப்பு விழிப்புணர்வுக் குழுக்களை அல்லது தனிப்படைகளை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஏற்படுத்த வேண்டும்.

 

வெளியூர்களில் இருந்து வந்து தங்குபவர்களைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தகாத உறவுகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள், தனிமனிதச் சிதைவுகள் மற்றும் சமுதாய ஆபத்துகள் குறித்து உரிய விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.

 

நவீன யுகம் என்ற போர்வையில் கலாச்சாரத்தைக் குழிதோண்டிப் புதைத்தால், வருங்காலச் சமுதாயம் அநாதைக் குழந்தைகளாலும், குற்றவாளிகளாலும் மட்டுமே நிறைந்திருக்கும். இந்தத் தீராத பேராபத்தைத் தடுக்க சமுதாயமும், அரசு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் போர்க்கால அடிப்படையில் களம் இறங்கி மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். இல்லையெனில், நம் இல்லற சந்தோஷங்கள் யாவும் இந்த நவீன மோகத்தில் கருகிச் சாம்பலாவது நிச்சயம்!

Leave a Reply

Right Menu Icon