--- --:--:-- --

அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

7

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேண்டீனில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தற்போது நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட பெண், அந்த கேண்டீனோடு தொடர்புடைய ஒரு கும்பல் தன்னைத் தகுதியற்ற முறையில் நடத்தியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் முதற்கட்டமாக கடந்த வியாழக்கிழமை அன்று கேண்டீன் உரிமையாளர் முத்துசெல்வம், அங்கு சமையல் செய்பவராகப் பணிபுரிந்த குணசேகரன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரான கார்த்திகேயன் ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேலதிக விசாரணையில், கேண்டீனில் பணிபுரியும் பாக்கியராஜ் என்பவருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை அன்று பாக்கியராஜையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர்.

 

கேண்டீனோடு தொடர்புடைய பல நபர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சம்பவம் நடந்த விதம் மற்றும் அதன் பின்னணி குறித்து முழுமையான தகவல்களைத் திரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon