மின் துறை ஊழலை மறைக்க சதி? * அம்பலமான ஹார்ட் டிஸ்க் திருட்டு.. * செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி!
தமிழக அரசியல் களம் தற்போது ‘ஹார்ட் டிஸ்க் திருட்டு’ விவகாரத்தால் பற்றிக் கொண்டு எரிகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியூட்டும் இந்த விவகாரம் வெறும் சாதாரண திருட்டு அல்ல; அதற்குப் பின்னால் முந்தைய ஆட்சியின் இமாலய ஊழல்களை மூடிமறைக்கும் பெரும் அரசியல் சதி வலை பின்னப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று, முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் ஊழலுக்கு எதிரான சாட்டையைச் சுழற்றத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் திமுகவுக்கு, குறிப்பாக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமாக மறைந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள்!

மின்வாரியத்தில் என்ன நடந்தது? கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி விடுமுறை நாள்களைப் பயன்படுத்தி, மின்வாரிய தலைமை அலுவலகத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பிரிவுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சிபியு (CPU)-க்களைக் கழற்றி, உள்ளே இருந்த ஏராளமான ஹார்ட் டிஸ்க்குகளைத் திருடிச் சென்றுள்ளனர். மின்வாரியத்தின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரியின் அறையில் இருந்த கம்ப்யூட்டரே உடைக்கப்பட்டு, தரவுகள் திருடப்பட்டுள்ளது தான் இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காவல் துறை விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டனர். இதில், ஹார்டு டிஸ்க்குகளை திருடியது, அங்கு ஒப்பந்த முறையில் பணியாற்றிய ஊழியரான ராயப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் (41) என்பது தெரியவந்தது.
இந்த அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுக் கண்காணிப்புக் கேமராக்கள் அகற்றப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கொள்முதல் மற்றும் ஒப்பந்த முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்களின் வருகை பதிவாகக்கூடாது என்ற நோக்கிலேயே கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
எனினும், தனிப்படை போலீஸாரின் தீவிர விசாரணையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதும், திருடப்பட்டவற்றில் 34 ஹார்ட் டிஸ்க்குகள் மீட்கப்பட்டிருப்பதும் மற்றொரு திருப்பமாகும்.
செந்தில் பாலாஜி ஊழலை அழிக்க சதி?
இந்த விவகாரம் குறித்து, வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 297 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி கொள்முதல் ஊழல், தரமற்ற நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் மற்றும் ‘காசி’ என்ற இடைத்தரகர் மூலமாக நடத்தப்பட்ட சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய டிஜிட்டல் சான்றுகள் இந்த ஹார்ட் டிஸ்க்குகளில்தான் சேமிக்கப்பட்டிருந்தன.

இந்த ஊழல் தொடர்பான கோப்புகள் சமீபத்தில் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்குச் சென்ற நிலையில், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் திருட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என அமைச்சர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். “டிஜிட்டல் ஆவணங்களை அழித்துவிட்டால் தப்பித்துவிடலாம் எனச் சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அனைத்து ஆவணங்களும் மேனுவல் கோப்புகளாகவும் எங்களிடம் பத்திரமாக உள்ளன” என்று அமைச்சர் நிர்மல் குமார் சவால் விடுத்துள்ளார்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு- செந்தில் பாலாஜி ரியாக்சன்!
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு, கோவையில் செந்தில் பாலாஜி உடனடியாக ரியாக்சன் கொடுத்தார் செந்தில் பாலாஜி. மின்வெட்டுப் பிரச்சினையை திசைதிருப்பவே அரசு ஹார்ட் டிஸ்க் திருட்டு நாடகத்தை ஆடுகிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “துறையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாத அரைகுறை நபர்கள் அமைச்சர்களாக உள்ளனர்; இது ரியல் ஆட்சி அல்ல, ரீல்ஸ் ஆட்சி” என ஆவேசமாக விமர்சித்தார் செந்தில் பாலாஜி.

ஆனால், செந்தில் பாலாஜியின் இந்த ஆவேசப் பேச்சுகளுக்குப் பின்னால் இருக்கும் பயமும் பதற்றமும் மக்களுக்கு நன்றாகவே புரிகிறது. சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் மின்வாரியத்தை முடக்கிப் போட்டு, 1.40 லட்சம் பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 70 ஆயிரம் பணியாளர்களை மட்டுமே விட்டுச் சென்று, மின்சாரத் துறையைச் சீரழித்ததாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
முதல்வர் விஜய்யின் அதிரடி ஆக்சன்!
மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடிவிட்டு, ஆதாரங்களை அழிக்க பழைய அரசியல் புள்ளிகள் முற்படுவதாக, பொதுமக்கள் மத்தியில் ஒருவித பேச்சு உள்ளது. ஊழல் பேர்வழிகள், யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் தப்பிக்கவே கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பொதுமக்களின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், “மின் துறை தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதில் பின்னணியில் யார் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி… யாரும் தப்ப முடியாது; தவறு செய்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்” என்று அமைச்சர் நிர்மல் குமார் மூலம் முதல்வர் விஜய் அவர்களின் அரசு மிகத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாகவும் பாரபட்சமின்றியும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்பதும், இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டின் பின்னணியில் உள்ள ‘பெரிய தலைகள்’ விரைவில் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்பதும் மட்டும் தற்போதைய அரசியல் நகர்வுகளின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.





