--- --:--:-- --

9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..!

8

புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. புதுவை நீதித்துறை வரலாற்றிலேயே போக்சோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

 

கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி, புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, உடல் வேஷ்டியில் சுற்றப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜிப்மர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

 

 

இதனையடுத்து, இந்த வழக்கு கொலை, கடத்தல், போக்சோ மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கஞ்சா போதைக்கு அடிமையான கருணா (எ) கருணாஸ் (18) மற்றும் விவேகானந்தன் (56) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், மற்றொரு குற்றவாளியான விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் 16-ம் தேதி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

 

 

புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. போலீசார் 560 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். ஏப்ரல் 30 இல், கருணா குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மே 5 இருதரப்பு இறுதி வாதங்கள் நடந்தன. அரசு தரப்பு வக்கீல் பச்சையப்பன் மற்றும் சிறுமி குடும்ப வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என 10 முக்கியக் காரணங்களை முன்வைத்தனர்.

 

இந்நிலையில் இன்று (மே 8) இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் குற்றவாளி கருணாசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கருணாஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். புதுச்சேரியில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon