மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை..!
சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் யான்சி (18) என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் பாருக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பார் நிர்வாகத்தின் பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர்.
பாரிலிருந்து வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், யான்சி தரப்பினர் மூன்று இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டனர். மற்றொரு தரப்பினர் காரில் சென்றுள்ளனர். இதற்கிடையில், யான்சி தரப்பைச் சேர்ந்த சிலர் காரின் கண்ணாடி மீது கல் வீச முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் வேகமாக வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது யான்சி பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி உள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த 17 வயது சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யான்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் அந்த காரை சுமன் சக்திவேல் என்பவர் ஓட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு காரை கோயம்பேடு புதிய மார்க்கெட் பகுதியில் நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கார் ஏற்றி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சுமன் சக்திவேல் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரை கைது செய்துள்ள கோயம்பேடு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.





