--- --:--:-- --

ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது!

dhddh

“அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?” – தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின் மரண ஓலம் ஓயவில்லை; அதற்குள் அடுத்ததாக நடுவானில் ஒரு பெண்ணின் கண்ணியம் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் திமுக நிர்வாகிகள் வரிசையாகப் பாலியல் புகார்களில் சிக்குவது, அறிவாலய வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.

 

நடுவானில் திமுக கவுன்சிலரின் அத்துமீறல்!

 

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி. சென்னையிலிருந்து டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்தது இண்டிகோ (6E-2761) விமானம். அதில் பயணித்த திருவள்ளூர் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகிய இருவரின் ‘செயல்பாடுகள்’ ஆரம்பத்திலிருந்தே சக பயணிகளை முகம் சுளிக்க வைத்திருக்கின்றன.

மது போதையில் தள்ளாடியபடி ஏறிய இவர்களின் பார்வை, அங்கு பணியில் இருந்த 25 வயது இளம்பெண் மீது விழுந்திருக்கிறது. சாதாரண விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணை அழைத்தவர்கள், “உன் ஊர் எது?”, “உன் பேர் என்ன?” என ஒருமையில் பேசி கிண்டல் செய்துள்ளனர். பணி நிமித்தமாகப் பொறுமை காத்த அந்தப் பெண்ணின் தோள்பட்டையில், ‘முதல் எதிரி’ பிரபாகரன் கை வைத்து அழுத்தியபோதுதான் அந்தப் பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.

 

“பணிப்பெண் என்பவள் உங்களுக்குச் சேவை செய்ய வந்தவளே தவிர, உங்கள் வக்கிரங்களுக்குத் தீனி போட வந்தவள் அல்ல” என்பதை மறந்து, அதிகாரத் திமிரில் பிரபாகரன் ஆடிய ஆட்டம் இப்போது அவரை கம்பி எண்ண வைத்திருக்கிறது.

 

தப்பிய கவுன்சிலர்களை வளைத்த போலீஸ்!

 

சம்பவம் நடந்தவுடன் விமானப்பணிப் பெண் துணிச்சலாக மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாரதிய நியாய சட்டம் (BNS) பிரிவு 74 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாமல் ‘தலைமறைவு’ நாடகம் ஆடிய பிரபாகரன் மற்றும் தியாகுவை, நேற்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்திலேயே வைத்து போலீஸ் பொறி வைத்துப் பிடித்தது.

விசாரணையில், “ஆமாம்… தப்பு செய்துவிட்டோம்” என அவர்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படிப் பொறுப்பற்று நடந்துகொள்வது திருவள்ளூர் மக்களைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

அஞ்செட்டி டூ திருவள்ளூர் வரை… தொடரும் கறை!

 

இந்தச் சம்பவம் தனித்த ஒன்றல்ல என்பதுதான் வேதனையின் உச்சம். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் திமுக கிளைச் செயலாளர் ‘கலைஞர்’ என்கிற பெரியநாயகம், இரண்டரை வயதுக் குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் இன்னும் ஈரம் காயவில்லை. தன் காதலியின் குழந்தையையே சிதைத்த அந்த அரக்கனின் செயல், திமுகவின் ‘திராவிட மாடல்’ பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் லட்சணம் இதுதானா என எதிர்க்கட்சிகளைத் துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.

 

விழுப்புரத்தில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த பாஸ்கரன், மாற்றுத்திறனாளி இளைஞரைச் சித்திரவதை செய்த எம்.எல்.ஏ-வின் உதவியாளர் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவது, கட்சியின் தலைமைக்கு விடப்பட்ட பெரும் சவால்.

 

தேர்தல் நேரத்தில் விழும் பலத்த அடி?

 

தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து இப்படிப்பட்ட இழிவான செயல்களில் ஈடுபடுவது அக்கட்சியின் செல்வாக்கைச் சரித்து வருகிறது.

 

மகளிருக்குக் கலைஞர் உரிமைத் தொகை வழங்கிப் பெண்களின் வாக்குகளைக் கவர நினைக்கும் திமுகவுக்கு, இத்தகைய பாலியல் புகார்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். “வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் நியாயம் கேட்பது?” என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் முன்வைக்கும் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியுள்ளன.

 

அடிமட்ட நிர்வாகிகள் முதல் கவுன்சிலர்கள் வரை “நம்ம ஆட்சிதானே… நமக்கென்ன?” என்கிற அதிகாரத் திமிரில் வலம் வருவது, ஸ்டாலினின் ‘கறார்’ உத்தரவுகளையும் மீறி நடப்பது புலனாகிறது.


எங்கே போகிறது தமிழகம்?

 

ஒரு சாதாரணக் குடிமகனாக யோசித்துப் பார்த்தால், நம் வீட்டுப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. விமானம் போன்ற உயர்தரப் பாதுகாப்புள்ள இடங்களிலேயே ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரணத் தெருக்களில் நிலைமை என்ன? “கட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தலைமை சொன்னாலும், மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடப்பது ஏன்?

 

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். “கட்சியின் கொடி கட்டிய காரில் சென்றால் எதையும் செய்யலாம்” என்கிற எண்ணம் தகர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் ‘சவுக்கடி’ கொடுக்கக் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.


 

Leave a Reply

Right Menu Icon