ஐபிஎஸ் அதிகாரிகள் முறைகேடு? மீண்டும் சர்ச்சையில் வருண் குமார்..அமலாக்கத் துறை கடிதத்தால் பகீர்!
தமிழக அரசியலில் இன்னொரு ‘பூகம்பம்’ கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த ‘ஊழல் ஆக்டோபஸ்’ கரங்கள், இப்போது சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண் குமார் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐபிஎஸ் சிலரின் ‘நேர்மை’ வேஷம் கலைந்து, ‘பேரம்’ பேசிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதுதான் கோட்டை வட்டாரத்தின் லேட்டஸ்ட் டாக் ஆக உள்ளது.
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. துறையின் பெயரில் ‘குடிநீர்’ இருந்தாலும், அங்கே ஓடுவது என்னவோ ‘பண ஆறு’ தான் போலிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தத் துறையில், கடந்த 2025 அக்டோபரில் 888 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக அமலாக்கத்துறை வெடிகுண்டை வீசியது.
அது வெறும் ஆரம்பம்தான் என்பது போல, அடுத்தடுத்து ரூ.1020 கோடி, ரூ. 365 கோடி என ஊழல் பட்டியல் கிளைவிட்டுப் பரவி, இன்று தமிழக அரசியல் களத்தில் தேர்தலுக்கு மத்தியில் அமலாக்கத் துறையும் தன் பங்கிற்கு பரபரப்பை கிளப்பி வருகிறது.
வசூல் ராஜாவான ‘வசூல்’ அதிகாரிகள்!
பணிநியமனம் வேண்டுமா? கோடியைக் கொட்டு! பணியிட மாற்றம் வேண்டுமா? லட்சங்களை வெட்டு ! ஒப்பந்தங்கள் வேண்டுமா? அமைச்சரின் உறவினர்களைக் கவனி! – இதுதான் அந்தத் துறையின் எழுதப்படாத விதியாக இருந்திருக்கிறது. கவி பிரசாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்ணன் என அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி உரையாடல்களையும், வாட்ஸ்-அப் தரவுகளையும் அமலாக்கத்துறை நோண்டியபோதுதான், அந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமானதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சுமார் 340 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் தலைவிதி, பல கோடி ரூபாய் பேரம் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதில் கொடுமை என்னவென்றால், தவறு செய்பவர்களைத் தண்டித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரே, இந்த ஊழல் சந்தையில் ‘புரோக்கர்களாக’ (Intermediaries) அவதாரம் எடுத்திருப்பதுதான். ‘வேலியே பயிரை மேய்ந்தால், பயிர் எங்கே போகும்?’ என்கிற ஆதங்கம் இப்போது சாமானிய மக்களிடையே கொழுந்துவிட்டு எரிகிறது.
சிக்கிய ‘சர்ச்சை’ வருண் குமார் பெயர்!
இந்த ஊழல் சதுரங்கத்தில் இப்போது செக் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர், சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண் குமார் ஐ.பி.எஸ் என்கிறார்கள். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி ‘சர்ச்சை நாயகனாக’ வலம் வந்தவர் இவர். இப்போது அவர் மீது பாய்ந்திருப்பது வெறும் வார்த்தை மோதல் அல்ல… முறைகேடு புகார்!
அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான சீருடை மற்றும் சிறு கொள்முதல் ஒப்பந்தங்களை ‘மனோஜ் குமார்’ என்பவருக்குப் பெற்றுத் தர, வருண் குமார் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி எஸ்.பி-யாக இருந்த காலத்திலேயே, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அலுவலகத் தானியங்கி முறைகேடுகளில் இவருக்குத் தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்களை அடுக்கியுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.
‘ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி, டெண்டர் யாருக்குப் போகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு, தனக்கு நெருக்கமானவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் வேலையைச் செய்வது எவ்வளவு பெரிய துரோகம்?’ என கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
எங்கே போனது மக்கள் பணம்?
இந்தக் கொள்ளையில் சுருட்டப்பட்ட பணத்தின் விவரங்கள் தலைசுற்ற வைக்கின்றன. அதாவது, 223 கோடி ரூபாயை, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் முதலீடு செய்துள்ளனராம். மேலும், 44 கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கபட்டுள்ளதாகவும், 2.5 கோடி ரூபாய், பளபளக்கும் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டதாக, அமலாக்கத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
மக்களின் வரிப்பணம், அமைச்சரின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கைக்காகச் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. நீதிமன்றம் தலையிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், காக்கிச் சட்டை அதிகாரிகள் அமைச்சரைக் காப்பாற்றத் துடிப்பதும், வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டப் போராட்டமா? சலுகை நாடகமா?
கடந்த 2011ஆம் ஆண்டில் வரதட்சணை புகாரில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி, பிறகு நீதிமன்றம் மூலம் மீண்டும் பணிக்கு வந்தவர் இந்த வருண் குமார். ‘ஒருமுறை சறுக்கினால் அது தவறு, மீண்டும் மீண்டும் சறுக்கினால் அதுதான் குணம்’ என்பது போல, தற்போது அதிகார துஷ்பிரயோகப் புகாரில் அவர் சிக்கியிருப்பது ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலேயே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையின் பிடி இறுகத் தொடங்கியுள்ள நிலையில், வருண் குமார் தரப்போ இந்தப் புகார்களை மறுத்து வருகிறது. ஆனால், கசிந்துள்ள வாட்ஸ்-அப் ஆதாரங்கள் பொய்யாக இருக்க முடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக அரசியல் களத்தில் இது ஒரு பெரிய ‘பூகம்பத்தை’ ஏற்படுத்தி உள்ளது என்பதில் ஐயமில்லை.
நேர்மையான அதிகாரிகள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டிய காலகட்டத்தில், ஒரு சிலரின் சுயநலத்தால் ஒட்டுமொத்தத் துறையும் கறைபடிந்து நிற்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து இவர்கள் தப்பிப்பார்களா அல்லது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இவர்களின் காக்கிச் சட்டை கழற்றப்படுமா? நீதி தேவதை தன் கண்களைத் திறப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்!






