கோவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு..!
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில் வசிக்கும் தம்பதியின் 10 வயது மகள், வியாழனன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்காத சூழலில், நொந்துபோன பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் அன்றிரவே புகார் அளித்தனர்.
இதனையடுத்து, வழக்கை கையில் எடுத்த சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டனர். அதில், கடத்தப்பட்டதாகத் தேடப்பட்டு வந்த சிறுமிதான், சடலமாக கிடப்பது உறுதியானது.
இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுச் செய்து வருகின்றனர். இதனிடையே, இக்கொடூரச் சம்பவத்திற்கு நீதி கேட்டும், பிடிபட்டவர்களை தங்களிடம் காட்ட வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான், சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் (33 ) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.





