அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி கொலை..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மார்ச் 9 இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த அவர், இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை சுப்புராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குளத்தூர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்ட பின்னரே புகார் ஏற்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 10 இரவு காட்டுப் பகுதியில் தேடியபோது, அந்த மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் முகத்தில் சிதைக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், புகார் அளிக்கச் சென்றபோது அலட்சியமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி மதன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





