--- --:--:-- --

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

cxbxcbxb

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத் தாயின் கதறல், மற்றும் மறைக்கப்படும் உண்மைகள் என, விலகாத ஒரு பெரிய மர்மத் திரை ஒளிந்து கிடக்கிறது.

 

“என் புள்ளைய காணோம்னு தேடிட்டு வந்தப்ப, இங்க வரலைன்னு அடிச்சு சொன்னாங்களே… இப்போ எப்படி அவன் உடம்பு குவாரிக்குள்ள வந்துச்சு?” – இது கருப்பசாமியின் உறவினர்கள் கேட்கும் மரண ஓலம் கலந்த கேள்வி.

 

எம்-சாண்ட் மேட்டில் புதைந்த உண்மை!

 

சரளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கருப்பசாமி. மனநலம் சற்றே குன்றியவர் என்று சொல்லப்பட்டாலும், ஊருக்குள் யாரிடமும் வம்பு தும்புக்கு போகாதவர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மாயமான கருப்பசாமியை, அவரது தந்தை மூக்கனும் உறவினர்களும் திசையெங்கும் தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தத் தனியார் கல்குவாரிக்குச் சென்று கேட்டபோது, இங்கெல்லாம் அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லி, அங்கிருந்தவர்கள் அலட்சியமாகப் பதிலளித்து விரட்டி இருக்கிறார்கள்.

 

ஆனால், உண்மை எத்தனை அடி ஆழத்தில் புதைந்தாலும் வெளியே வரும் என்பார்கள். அந்த குவாரியில் எம்-சாண்ட் அள்ளும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, 10 அடி ஆழத்தில் அழுகிய நிலையில் ஒரு சடலம் தட்டுப்பட்டது. அது காணாமல் போன கருப்பசாமிதான் என்று தெரிந்ததும் ஊரே திரண்டது. குவாரி முற்றுகையிடப்பட்டது.

யார் இந்த பழனியாண்டி?

 

இந்தக் கல்குவாரி யாருடையது என்கிற கேள்விதான் இப்போது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்குச் சொந்தமானது இந்தக் குவாரி. பழனியாண்டி என்றாலே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத பெயர்.

 

சமீபத்தில்தான், கரூர் பகுதியில் உள்ள தனது குவாரியில் நடக்கும் முறைகேடுகளைப் படம் பிடிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களைத் தாக்கிய விவகாரத்தில் பழனியாண்டி செய்திகளில் அடிபட்டார். ‘ஆளுங்கட்சி’ என்ற போர்வையில் சட்டத்தை தன் சட்டைப் பையில் வைத்திருக்கும் இத்தகைய நபர்களின் குவாரியில், ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தற்செயலானதா?

 

அதிமுக, பாமக எழுப்பும் ‘சவுக்கடி’ கேள்விகள்!

 

இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் பாமக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் புறந்தள்ளக் கூடியவை அல்ல. அதிமுக தனது எக்ஸ் தளத்தில், “ஏற்கனவே செய்தியாளர்களைத் தாக்கி, ஆளுங்கட்சி பலத்தால் மறைக்க முயன்ற ஒரு குண்டர் தான் இந்த பழனியாண்டி. இப்போது அவர் மகனின் குவாரியில் சடலம் மீட்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” என நேரடியாகவே அட்டாக் செய்துள்ளது.

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் விடுவதாக இல்லை. “செய்தியாளர்களைக் கடத்தித் தாக்கிய வழக்கிலேயே அவர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த தைரியத்தில்தான் அடுத்தடுத்த அத்துமீறல்கள் நடக்கின்றனவா? கருப்பசாமி தற்செயலாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு குவாரிக்குள் வீசப்பட்டாரா?” எனப் பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

 

மக்களின் சந்தேகம்: விபத்தா? கொலையா?

 

குவாரிக்குள் கருப்பசாமி எப்படி நுழைந்தார்? பத்து நாட்களாக அவர் உடல் அங்கேயே இருந்தும் குவாரி நிர்வாகம் ஏன் கண்டுபிடிக்கவில்லை? அல்லது தெரிந்தே மறைத்தார்களா? எம்-சாண்ட் கொட்டப்பட்ட குழிக்குள் உடல் இருந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

 

ஒருவேளை குவாரியில் நடக்கும் ஏதேனும் ரகசியங்களை அவர் பார்த்துவிட்டாரா? குவாரி வாகனங்கள் மோதி அவர் இறந்தாரா? அதை மறைக்க உடல் புதைக்கப்பட்டதா? பத்து நாட்களுக்கு முன்பே உறவினர்கள் கேட்டபோது ஏன் மறுத்தார்கள்? இப்படிப் பல கேள்விகள் செந்துறை பகுதியில் தீயாகப் பரவி வருகின்றன.


விடியல் எப்போது? – திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை!

திமுக தலைமை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று மேடைதோறும் முழங்கினாலும், அடிமட்ட அளவில் இருக்கும் இது போன்ற எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் கட்சிக்குத் தான் தீராத களங்கத்தை ஏற்படுத்துகின்றன. செய்தியாளர்களைத் தாக்கிய போதே பழனியாண்டி மீது தலைமை கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று ஒரு உயிரற்ற உடல் குவாரிக்குள் கிடந்திருக்காது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து.

 

“மீண்டும் சீட் கொடுக்காதீங்க!” – இது அந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. அதிகார பலத்தால் எதையும் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கும் நபர்களுக்கு மீண்டும் மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அது ஜனநாயகத்திற்கே இழைக்கப்படும் துரோகம்.

 

தமிழக காவல்துறை மற்றும் அரசு, எந்தப் பாரபட்சமும் இன்றி இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும். அது தற்செயலான மரணமாக இருந்தாலும் சரி, திட்டமிட்ட கொலையாக இருந்தாலும் சரி… உண்மை ஊர் உலகிற்குத் தெரிய வேண்டும். கருப்பசாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா? அல்லது ‘எம்.எல்.ஏ மகன்’ என்ற அதிகார நிழலில் இந்த வழக்கும் காணாமல் போகுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


 

Leave a Reply

Right Menu Icon