--- --:--:-- --

காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!

3

சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளித்த புகார், போலீஸ் விசாரணையில் பொய் என அம்பலமானது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி ஒருவர், தனது படிப்பு தொடர்பான புராஜெக்ட் பணிக்காகக் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.

 

அடையாரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த தன்னை, மர்ம கும்பல் ஒன்று மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும், கடந்த மார்ச் 9-ஆம் தேதி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சென்னை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.

 

அந்த மாணவி தனது புகாரில், தான் கார் முன்பதிவு செய்து காத்திருந்த போது மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாகத் தன்னை இழுத்துச் சென்றதாகவும், முகத்தில் மயக்கப் பொடி தூவி வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய போதும் அதே கும்பல் மீண்டும் வழிமறித்து மிரட்டியதாக மிகவும் விரிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

 

தலைநகரின் மையப்பகுதியில், முதல்வரின் இல்லத்திற்கு அருகிலேயே இத்தகைய சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. தமிழக முதல்வர் இல்லத்திற்கு மிக அருகிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பதாகக் கூறி அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், விஜய் எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தன.

 

புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, போலீசார் தனிப்படை அமைத்து மாணவி குறிப்பிட்ட அடையார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். பல மணிநேரக் காட்சிகளை அலசி ஆராய்ந்ததில், மாணவி குறிப்பிட்டது போல எந்தவொரு கடத்தல் சம்பவமோ, கார் நடமாட்டமோ அங்கு நிகழவில்லை என்பது உறுதியானது.

 

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவியிடம் போலீசார் மீண்டும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு ஏற்பட்ட படிப்பு அழுத்தம் மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே இத்தகைய ‘பொய்’ புகாரை அளித்ததாக அந்த மாணவி ஒப்புக்கொண்டார்.

 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பிய இந்தச் சம்பவம், இறுதியில் ஒரு மாணவியின் மன உளைச்சலால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை எனத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது உண்மையான நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருப்பினும், எதற்காக இவ்வளவு பெரிய பொய் புகாரை அந்த மாணவி அளித்தார் என்பது குறித்து போலீசார் இன்னும் ஆழமாக விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon