கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக வைத்த பேனரால் பெரும் விபரீதம் நிகழ்ந்தது. கடந்த மாதம் 12-ந் தேதி சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோனது. சுபஸ்ரீயின் இந்த உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாச்சாரத்திற்கு எதிராகவும் உரத்த குரல்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் தாமாகவே முன்வந்து வழக்காக விசாரித்ததுடன், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் சாட்டையை சுழற்றியது. பேனர் கூடாது என்று அரசியல் கட்சிகள் ஏன் முடிவெடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும், தங்கள் கட்சியினர் பேனர் வைக்கக் கூடாது என உத்தரவே போட்டனர்.திமுகவோ ஒரு படி தாண்டி, தங்கள் கட்சி சார்பில் பேனர் வைக்க மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமே தாக்கல் செய்தது.
இந்நிலையில், பேனர் விவகாரத்தில் ஆளும் அதிமுக தரப்பில் பெரும் மவுனம் சாதிக்கப்பட்டு வந்தது. அத்துடன் சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக, அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கக் கூடாது என அதிமுக நிர்வாகிகளை, கட்சி மேலிடம் சார்பில் அறிவுறித்தப்பட்டுள்ளதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.