ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.பல லட்சம் சுருட்டியவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிப்பது வெகு காலமாக இருந்து வரும் மோசடி. கூடுதலாக சில லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வேலை வாங்கி வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினரே இந்த மோசடியால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

இதில் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் மோசடியில், திருச்சி பொன்மலை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் பாலாஜி ஆகியோர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்வே பணிமனையில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து 11 பேரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மூன்று மாதங்களாக போலி பணி அழைப்பு ஆணை, ரயில்வே துறையில் முத்திரை போடப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்து அவர்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

 

இதனை நம்பிய பதினோரு பேரும் வேலைக்கு ஏற்றவாறு ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளனர். இறுதி ஆணையை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி அவர்கள் பணம் கொடுப்பவர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளனர். திடீரென பேச்சை மாற்றிய இருவரும் பணி நியமன ஆணை பெற கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் சத்தியமூர்த்தியை சென்னை அண்ணாசாலையில் வைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சத்தியமூர்த்தி இடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இவ்விருவரின் பின்னணியில் இருக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply