--- --:--:-- --

“முதல்வர் எடப்பாடியும், மு.க.ஸ்டாலினும் முதல் முறையாக ஒரே விமானத்தில் பயணம்!!” வணக்கம் மட்டுமா அல்லது பேசிக் கொள்வரா? என எதிர்பார்ப்பு!!

1.1

சும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே விமானத்தில் மதுரைக்கு பயணம் மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது இதுவே முதல்முறை என்பதால் இந்தப் பயணத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் இருவரும் மரியாதைக்காக வணக்கம் மட்டும் வைப்பரா? அல்லது பேசிக் கொள்வரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30-ந் தேதி தேவர் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தேவர் குருபூஜை நடத்தப்படும். பல்லேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவம் வழக்கம்.

 

இதன்படி நாளை நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்படும் இன்டிகோ விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் அதே விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

ஒரே விமானத்தில் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் பயணம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இந்தப் பயணத்தின் போது நேருக்கு நேர் சந்திக்கும் இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வார்களா? அல்லது மரியாதைக்கு வணக்கம் மட்டும் வைத்துக் கொள்வார்களா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

இதற்கிடையே ஒரே விமானத்தில் வந்திறங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினரும், மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுகவினரும் பெருமளவில் திரள்வார்கள் என்பதால் மதுரை விமான நிலைய வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

மதுரையில் இன்று இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கும் இருவரும் நாளை பசும்பொன் செல்கின்றனர். அங்கு முதலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக பசும்பொன்னில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியிலும் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon