ம.தி.மு.க அலுவலகம் முற்றுகை..!
திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில், “மேதகு தமிழ் நாடு ஆளுநர் அவர்கள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை கண்டித்து மதிமுக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியதை கண்டித்து ம.தி.மு.க தலைமைக் கழகம் தாயகத்தை தமிழக இந்து பரிவார் அமைப்பு முற்றுகையிடுவதை திராவிட வெற்றிக் கழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது தேவைப்படின் களத்தில் இறங்குவதற்கு தயங்க மாட்டோம் என்பதை எச்சரிக்கை செய்கின்றேன்.
தமிழக இந்து பரிவார் அமைப்பு ஆளுநருக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை நடத்துகிறது என்றால் ஆளுநர் ஆதரவோடுதான் நடைபெறுகிறதா என்பதை ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த காலங்களில் இது போன்று ஒரு மதவெறி கூட்டம் தாயகத்தை முற்றுகையிட வந்த போது முற்றுகை இட கூடிய இடத்திற்கே எனது தலைமையில் சென்று விரட்டி அடித்தவர்கள் நாங்கள், அதேபோன்று மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பில் இருக்கும் ஒருவரின் இடம் பிரச்சனை ஏற்பட்டபோது வடசென்னையை சேர்ந்த ஒரு கும்பல் தாயகத்தை முற்றுகையிட முயற்சித்தது மேலும் இரண்டு சம்பவங்களிலும் இரவு பகலாக தாயகத்தை பாதுகாத்தவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று கருதி விடவேண்டாம்.
சேனாதிபதியும் வீரர்களும் யுத்த புரவிகளும் யானைகளும் வெளியேதான் இருக்கும்,தேவைப்படும் போது தாயகத்தை பாதுகாக்க படை பரிவாரங்களுடன் வருவோம். தமிழ் நாடு அரசும் காவல் துறையும் இது போன்ற காலிக் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் விளைவுகள் மோசமாகும். என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்” என்று அவர் தெரிவித்து இருக்கிறார். ம.தி.மு.க-வில் முன்னணி நிர்வாகியாக இருந்த மல்லை சத்யா, கருத்து வேறுபாடு காரணமாக திராவிட வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.





