--- --:--:-- --

சிங்கமொன்று புறப்பட்டது! * பாஜகவுக்கு அண்ணாமலை திடீர் முழுக்கு! * பின்னணியில் மோடி- அமித்ஷா பலே திட்டம்?

sgryh

மிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த பாஜகவையும் அறிவாலயத்தையும், ராயப்பேட்டையையும் உலுக்கிப் போட்டிருக்கிறது அண்ணாமலையின் புதுக்கட்சி அறிவிப்பு!

 

பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘வி தி லீடர் ’ (www.wetheleaders.org) என்ற புதிய அரசியல் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார். அறிவிப்பு வெளியான வெறும் 10 மணி நேரத்தில், சுமார் 10 லட்சம் உறுப்பினர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்தத் திடீர் சுனாமி, தமிழகத்தின் பிரதான கட்சிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

 

அண்ணாமலையின் ‘பவர் பிளே’- கலக்கத்தில் கட்சிகள்!

 

சாமானிய மனிதன் என்ற அரசியலை முன்னிறுத்தி அண்ணாமலை ஆடியிருக்கும் இந்த ஆட்டம், இங்குள்ள கட்சிகளுக்கு சற்றும் எதிர்பாராத பலத்த அதிர்ச்சி. தமிழகத்தில் தாமரையைத் தட்டி எழுப்ப அண்ணாமலைதான் சரியான நபர் என்று நம்பிய மோடி – அமித் ஷா கூட்டணிக்கு, அவரது இந்த விலகல் பெரும் பின்னடைவு.

 

அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் எவ்வளவோ சமரசம் பேசியும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்து வெளியேறியுள்ளார். அண்ணாமலை வெளியேறிய கையோடு, தமிழக பாஜகவில் இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களும், கீழ்மட்டத் தொண்டர்களும் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் இதுவரை அண்ணாமலை கஷ்டப்பட்டு உருவாக்கிய பாசிட்டிவ் இமேஜ் மொத்தமும் காலி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

சிங்கம் வருகை; சீற்றத்தில் திமுக!

 

அண்ணாமலையின் இந்தத் தனி ஆவர்த்தனம் திமுகவிற்குள் லேசான பீதியை கிளப்பியுள்ளது. இதுவரை பாஜகவை ‘மதவாத கட்சி’ என்று முத்திரை குத்தி, சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற வாக்குகளை எளிதாகப் பெற்று வந்தது திமுக. ஆனால், அண்ணாமலை இப்போது அந்த ‘மதச்சாயத்தை’ முற்றிலுமாகக் கழற்றி எறிந்துவிட்டு, அப்துல் கலாம் பெயரில் கோவையில் பயிற்சி மையம் தொடங்கி, மதச்சார்பற்ற வியூகத்தைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

 

அதிமுக வலுவிழந்து வரும் சூழலில், திமுகவிற்கு எதிரான வாக்குகளை அண்ணாமலையும், விஜய்யின் தவெகவும் பிரித்துவிட்டால், அது தங்களின் வாக்கு வங்கியைச் சிதறடித்துவிடும் என்ற பயம் அறிவாலய வட்டாரத்தில் உள்ளது.

 

கரைந்து கட்சி; கடும் அச்சத்தில் அதிமுக!

 

மற்ற எல்லோரையும் விட, அண்ணாமலை வரவால் நிலைகுலைந்து போயிருப்பது எடப்பாடி பழனிசாமிதான். ஏற்கெனவே பாதி கட்சி கரைந்து தவெகவில் ஐக்கியமாகிவிட்டது. மீதி கட்சியை அண்ணாமலை அபகரித்துவிடுவாரோ என எடப்பாடி கவலையில் உள்ளார். அண்ணாமலை தனி அணி அமைப்பதும், விஜய்யின் ‘தவெக’ விஸ்வரூபம் எடுப்பதும் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியைத்தான் அடியோடு காலி செய்யும்.

 

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கோவையை மையமாக வைத்து காய்களை நகர்த்துவதால், அதிமுகவின் வாக்குகள் கரைந்து காணாமல் போய்விடுமோ என்ற கடும் அச்சத்தில் எடப்பாடி தரப்பு இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் கிசுகிசுக்கிறார்கள்.

 

 

10 மணி நேரத்தில் 10 லட்சம்: டிஜிட்டல் சுனாமி!

அண்ணாமலை தனது ‘வி தி லீடர்’ தளத்தைத் தொடங்கிய 10 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்திருப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் மேடை போட்டு, பிரியாணி கொடுத்து சேர்த்த கூட்டத்திற்கு மத்தியில், ஒரு லிங்க் மூலமாக இத்தனை லட்சம் இளைஞர்களை ஈர்த்திருப்பது அண்ணாமலையின் தனிப்பட்ட செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய டிஜிட்டல் சுனாமி என்றே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

 

திமுக – அதிமுக ‘சலிப்பு’- புது நம்பிக்கை தவெக – அண்ணாமலை!

 

மாற்றி மாற்றி திமுக, பிறகு அதிமுக என வாக்களித்து சலித்துப்போன தமிழக மக்களுக்கு, இந்த முறை ஒரு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அந்த இடத்தை நிரப்பவே சீமான், விஜய், இப்போது அண்ணாமலை எனப் போட்டி பலமாகியுள்ளது.

 

“நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான அரசியலை முன்னிறுத்த வேண்டும்” என்ற அண்ணாமலையின் முழக்கமும், விஜய்யின் தவெக வருகையும் தமிழக இளைஞர்களுக்கும் நடுநிலையான மக்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 


‘தனி’ ரூட்… ஆனால் ‘அதே’ ரிமோட்?

 

அதேநேரம், அண்ணாமலை பாஜகவின் பி டீம்தான் என்று குரல்களும் சந்தேகங்களும் ஒலிக்கின்றன. ‘டெல்லி டூ சென்னை’ ரகசியமாக நகர்த்தப்படும் ஒரு புதிய அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இது என்கிறார்கள். “தமிழகத்தில் தாமரை எத்தனை முறை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் வேரூன்ற முடியாது” என்பதுதான் எதார்த்தம் என்பதை பாஜக மேலிடம் உணர்ந்துவிட்டதால், அண்ணாமலை ரூபத்தில் புதிய ‘மாஸ்டர் பிளான்’போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

 

இதன் பின்னணியில் இருக்கும் கணக்கு மிக எளிதானது, ஆனால் ஆபத்தானது. விஜய், உதயநிதி எனத் தமிழக அரசியல் ‘யங் லீடர்களை’ நோக்கி நகரும்போது, அண்ணாமலைக்கு இருக்கும் ‘பாஜக’ என்ற முத்திரை மிகப்பெரிய மைனஸாகப் பார்க்கப்படுகிறது. அந்த ‘இந்துத்துவ’ முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு ‘பக்கா’ தமிழராக களமிறங்கினால் மட்டுமே இவர்களுக்குக் கடும் போட்டியைத் தர முடியும் என்பதால் களமிறக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், லேபிள் மாறினாலும், மருந்து ஒன்றுதான்! “அண்ணாமலை போடுவது தனிப் பாதை அல்ல, பாஜகவின் வேறொரு முகமூடி” என்று திராவிடப் பட்டறையின் மூத்த தலைவர்கள் இப்போதே விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.


5 முனைப் போட்டி: ஜெயிப்பாரா ‘சிங்கக்குட்டி’?

 

எது எப்படினானாலும், இனி தேர்தல் களம் திமுக, அதிமுக, விஜய் (தவெக), அண்ணாமலையின் புதிய இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி என, ‘5 முனைப் போட்டி’யாக உருமாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழக அரசியலும் இப்போது அண்ணாமலையின் அடுத்த மூவ் என்ன என்றே உற்று நோக்குகிறது.

 

வழக்கமான திராவிடக் கட்சிகளின் பணபலத்தையும், வியூகங்களையும் உடைத்து, அண்ணாமலையின் இந்த ‘காமன் மேன்’ அரசியல் தமிழகத் தேர்தலில் ஜெயிக்குமா? சாமானியர்கள் இவருக்குக் கிரீடம் சூட்டுவார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a Reply

Right Menu Icon