சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! * ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! * சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் விஜய்?
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்; சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்போம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்பதை வெறும் ‘வாக்குறுதியாக’ அல்லாமல், மக்களுக்குத் தரும் ‘உத்தரவாதம்’ என்று. கடந்த மாதம் தேர்தல் பரப்புரைகளில் விஜய் முழங்கினார்.
ஆனால், இன்று “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!” என்று மக்களின் உதடுகள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, திமுக என மாறி மாறிப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், ‘மாற்றம்’ என்ற ஒற்றை மந்திரத்தை நம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரியணை மகுடத்தை சூட்டினார்கள்.
முந்தைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது, நாலாபுறமும் வெடித்த பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் ஆகியவைதான் முந்தைய ஆளும்கட்சியின் வீழ்ச்சிக்குக் கம்பளம் விரித்தன. “நாங்கள் வந்தால் எல்லாம் மாறும்” என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்தனர். ஆனால், ஆட்சி கட்டிலில் ஏறிய முதல் 15 நாட்களிலேயே தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் நீடித்த அவலங்கள் அப்படியே தொடர்கின்றன.
கோவை கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சூலூர் சம்பவம்!

மாற்றம் தேடி வாக்களித்த சாமானிய மக்களுக்கு, முதல் 15 நாட்களிலேயே இடி போன்ற செய்திகள் தான் வந்தவண்ணம் உள்ளன. கோவையின் சூலூர் பள்ளப்பாளையம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை, ‘சாக்லேட் தருகிறேன்’ என நயவஞ்சகமாக ஆசை வார்த்தை கூறி கடத்தியிருக்கிறான் அவளது அப்பாவின் நண்பனே! 15 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் செல்லப்பட்ட அந்தப் பிஞ்சு, கொடூரமாக சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியின் ஈரம் காய்வதற்குள், அடுத்தடுத்து விழுந்தன சாட்டையடிகள். விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, பக்திப் பரவசத்தோடு மக்கள் நடமாடும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அரங்கேறிய சிறுவன் படுகொலை, கோவையில் இளம்பெண் ஒருவரின் வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு என அடுத்தடுத்து நிகழ்ந்த கொடூரங்கள் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகின்றன.
முதல்வரின் தொகுதியிலேயே அட்டூழியம்…!

“தலைநகரிலாவது சட்டம் ஒழுங்கு கம்பீரமாக இருக்கிறதா?” என்றால், அங்கேயும் ‘பிக்பாக்கெட்’ அடித்த கதையாகத்தான் இருக்கிறது நிலவரம். முதலமைச்சர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூரிலேயே போதைக் கும்பல் ஒன்று நள்ளிரவில் 13 வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளது. முதலமைச்சரின் தொகுதிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.
எல்லாவற்றுக்கும் உச்சமாக, சென்னை கோடம்பாக்கத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய தலைமைக் காவலர் ஒருவரே, ஒரு சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பூனைக்கே பால் காவல் வைத்த கதையாக, இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறைக்கே கறையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், சாமானிய மக்களின் மனதில் எழுந்துள்ள பயத்தை யாரால் போக்க முடியும்?
முதல் 15 நாட்களில் 25 கொலைகள்!

விஜய் அரசு பதவியேற்ற 2 வார காலத்துக்குள், நாளிதழ்களில் வந்த செய்திகளை மட்டும் புரட்டினால் நெஞ்சு பதறுகிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 15 நாட்களில் மட்டும் சுமார் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா சாப்பிட்டது போலாகிவிட்டது. சும்மாவே சீறும் திமுக, அதிமுக, அமமுக, பாமக போன்றவை, வரிந்துகட்டிக்கொண்டு விஜய் அரசை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டன. மறுபுறம், பெண்களின் பாதுகாப்புக்காகப் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட ‘சிங்கப்பெண் மகளிர் பாதுகாப்பு படை’ திட்டத்தின் தொடக்க விழா, எதனால் இரண்டு முறை தள்ளிப்போனது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நீடிக்கிறது!
மௌன சாமியாராக இருக்கும் தளபதி!

“ஆட்சி அமைத்து 15 நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை எப்படிச் சீரமைக்க முடியும்? குறைந்தபட்சம் 6 மாத காலமாவது அவகாசம் வேண்டாமா?” என்று தவெக ஆதரவாளர்கள் முட்டுக்கொடுக்கலாம். வாதத்திற்காக அதை ஏற்றுக் கொண்டாலும், சாமானிய மக்களின் ஆதங்கம் வேறு இடத்தில் இருக்கிறது.
சினிமாவில் அநீதிகளைக் கண்டு பொங்கியெழும் விஜய், நிஜ வாழ்க்கையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஏன் இவ்வளவு மௌனம் காக்கிறார்? பத்திரிகையாளர்களைச் சந்தித்து “குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்” என்று ஒரு தைரியமான வார்த்தை சொல்லியிருக்கலாமே! அல்லது எப்போதும் போல சமூக வலைதளத்திலாவது ஒரு கண்டனப் பதிவை வெளியிட்டிருக்கலாமே? இந்த மௌனம்தான் சாமானிய மக்களை அஞ்ச வைக்கிறது; எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறுகிறது.
இனியாவது சுழலுமா சாட்டை?

காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் விஜய், இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி விழித்துக்கொள்ள வேண்டும். கோட்டையில் அமர்ந்து கொண்டு, கோட் ஷூட் போட்டுக் கொண்டு, கோப்புகளை மட்டும் பார்ப்பது போதாது; களத்தில் இறங்கி காவல்துறையின் கைகளைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலைக்குச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அவரிடமே உள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ‘தளபதி’, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளிகளின் மீது சாட்டையைச் சுழற்றுவாரா? அல்லது மௌனத்தையே ஆயுதமாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!





