“வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை!!” தமிழகத்தில் 2 நாட்களுக்கு “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை!!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வெளுத்துக் கட்டிய கனமழையால் மழை நீர் பல இடங்களில் தேங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை வெளுத்து கட்டியது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2017-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை இன்று பதிவாகி உள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் குளம்போல் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






