ரூ.45 விலையில் வெங்காயம்.. அலை மோதிய மக்கள்.. பண்ணை பசுமை கடைகளிலும் தட்டுப்பாடு
வெங்காயம் விலை வெளி மார்க்கெட்டில் ரூ.100, 120 என எகிறி கண்ணீர் விட வைத்த நிலையில், தமிழக அரசு ரூ.45 விலையில் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்தது. ஆனால் மக்கள் கூட்டம் அலை மோதியதால் அந்தக் கடைகளிலும் இப்போது வெங்காயத்திற்கு தட்டுப்பாடாகியுள்ளது.
சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்திற்கு அவ்வப்போது கடும் கிராக்கி ஏற்பட்டு விலைவாசி விர்ரென உச்சத்திற்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. இப்போது கன மழை காரணமாக வரத்து குறைந்ததால், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே ரூ.100க்கு மேல் வெளிமார்க்கெட்டில் விற்பனையாகிறது. இதனால் ஏழை , நடுத்தர மக்கள் மட்டுமின்றி சிறு ஹோட்டல் நடத்துப்பர்களை கண்ணீர் விடச் செய்துள்ளது வெங்காயத்தின் விலைவாசி நிலவரம்.
இந்நிலையில் தான், தமிழக அரசே ரூ.45 விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அறிவித்தது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணை பசுமை கடைகளில் ரூ.45 விலையில் விற்க அரசு ஏற்பாடு செய்தது. இதன்படி நேற்று முன்தினம் முதல் பெரிய வெங்காயம் சென்னையில் உள்ள பசுமை பண்ணை அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நபர் ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டாலும், வேகமாக விற்றுத் தீர்ந்தது .
இன்று காலையும் 5 மணி முதலே மக்கள் கடைகள் முன் திரண்ட நிலையில், பல கடைகளிலும் வெங்காயம் இருப்பு இல்லாமல் தட்டுப்பாடாகிப் போனது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 9 டன் வெங்காயம் விற்பனை ஆன நிலையில், மேற் கொண்டு வரத்து இல்லாததால் ரூ.45 விலையும் வெங்காயம் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர். பண்டிகை கால நேரத்தில் வெங்காயம் விலை இன்னும் ஏற்றம் காணும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. தமிழக அரசோ குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை என்று கூறிவிட்டு, பெயரளவுக்கு ஓரிரு நாள் மட்டும் விற்பனை செய்து விட்டு தீர்ந்துவிட்டது என்று கூறாமல் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏழை ,நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





