ஐபிஎல் தொடர் : “பிளே ஆப்” சுற்று வாய்ப்பு சென்னை அணிக்கு உள்ளதா? “மாயாஜாலம்” நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்!!
ஐபிஎல் தொடரில் எந்தாண்டும் இல்லாத மோசமான நிலைக்கு இந்தாண்டு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 10 போட்டிகளில் 7-ல் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி, ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் தடவையாக மூட்டை கட்ட வேண்டிய சுழலில் தத்தளிக்கிறது.
இருந்தாலும் அடுத்த 4 போட்டிகளில் சிஎஸ்கே நக்கு சாதகமாக மந்திரம், மாயாஜாலம், அதிசயம், அற்புதம் என நிகழும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டும் என்ற நிலையும் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது இன்று நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் தெரிந்துவிடும்.
ஐபிஎல் போட்டிகளில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதனால் பெரிய ரசிகர் பட்டாளமும் சிஎஸ்கே பக்கம் உண்டு. இதுவரை 10 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்ற சென்னை அணி அத்தனை தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதுடன் முறை சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளது.
ஆனால் இந்தாண்டு ஐக்கிய அரபு எமிரேட் சில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு சோதனை மேல் சோதனை என்பது போல சோகம் மேல் சோதனை தான். முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக சாதித்து வெற்றி கணக்குடன் துவக்கினாலும், அடுத்தடுத்த போட்டிகள் அடிமேல் அடி தான்.
கேப்டன் தோனி என்னென்னவோ வியூகங்கள் வகுத்தாலும் வெற்றி சாத்தியப்படவில்லை. சின்னஞ் சிறு அணிகளிடம் கூட பலத்த அடி கிடைத்து இதுவரை ஆடியுள்ள 10 போட்டிகளில் 7-ல் தோல்வி கண்டு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.
இதனால் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்று இந்தத் தொடரில் சிஎஸ்கேவுக்கு கனவாகப் போகும் என்பது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம். ஆனாலும் கனவாகாமல் நனவாக இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சான்ஸ் இருப்பதும் உண்மை. ஆனால் அது சாத்தியப்பட இனி நடை பெற உள்ள எஞ்சிய போட்டிகளில் என்னென்னவோ மாயாஜாலங்கள் நிகழ வேண்டும். அப்படி என்ன மாயாஜாலம் நடந்தால் சென்னைக்கு ஜெயமாகும் என்பதை பார்ப்போம்.
இந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடும் நிலையில் 8 போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்று எளிதில் சாத்தியம். தற்போதைய நிலையில் 10 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி, பெங்களுரு அணிகள் தலா 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளன. அடுத்ததாக மும்பை அணி 9 போட்டிகளில் 6-ல் வென்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகும் 4 – வது அணி எது? என்பதில் தான் 5 அணிகளுக்குள் பெரும் அடிதடியே நடக்கிறது. இதில் அதிக வாய்ப்பு கொல்கத்தாவுக்கு என்று கூறலாம். அந்த அணி 10 போட்டியில் 5ல் வென்று 10 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில்
2 -ல் வென்றாலே கூட முன்னேறி விடும். அடுத்து ஐதராபாத் பஞ்சாப் அணிகள் தலா 10 போட்டிகளில் தலா 4-ல் வென்று தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் அடுத்து தாங்கள் விளையாடும் நான்கு போட்டிகளில் 3-ல் வென்றால் மட்டுமே பிளே ஆப் செல்லலாம்.
அடுத்து 7-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் 4-ல் வென்று 8 புள்ளிகளுடனும், கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி 10 போட்டிகளில் 3-ல் மட்டும் வென்று இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற பரிதாபத்தில் இரு அணிகளும் உள்ளன.
இதனால் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் சென்னை அணி அதிக வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வேண்டும். அதே வேளையில் முதல் மூன்று இடங்களில் உள்ள டெல்லி, பெங்களூரு, மும்பை அணிகள் மேலும் வெற்றியை குவிக்க வேண்டும். கொல்கத்தா, ஐதராபாத் , பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளோ தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டும். இப்படியெல்லாம் அதிசயங்களும், மாயாஜாலங்களும் நிகழ வேண்டும், அப்போது மட்டுமே சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டும்.
ஆக இந்த மாயாஜாலங்கள் நிகழுமா? என்பது இன்று மும்பையுடன் சென்னை அணி மோதும் போட்டியிலேயே தெரிந்துவிடும். இன்று மும்பையை அபார வித்தியாசத்தில் வென்றால் சென்னைக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிட்டால் அடுத்த போட்டிகளில் ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என ஒப்புக்கு ஆடிவிட்டு மூட்டை கட்ட வேண்டியதுதான்.





