முதல்வர்,துணை முதல்வர்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயருக்கு அவதூறு பரப்பும் வகையில் கோவையில் பேசிய உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இதனை கண்டித்து நேற்று முன்தினம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையிலும்,அவதூறு பரப்பும் நோக்கிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கோவையில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினரால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக வடக்கு மாவட்டம் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கண்டிக்கும் விதத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்தும்,திமுகவினரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாகவும் அச்சிடப்பட்ட பதாகைகள் கைகளில் ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர்,பேசிய கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.பி.ஆர்.ஜி.அருண்குமார் ‘ அதிமுக அரசையோ,தமிழக முதல்வரையோ,துணை முதல்வரையோ, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையோ பேச திமுகவிற்கு யோக்யதை இல்லை.அந்தளவிற்கு ஊழல் செய்த கட்சி திமுக எனவும், இந்தியாவிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக எனவும் குற்றஞ்சாட்டினார்.






