பசும்பொன்னில் குருபூஜை : இராமநாதபுரத்தில் போக்குவரத்து முன்கூட்டியே திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு!!
நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை நடைபெறவுள்ள நிலையில் இராமநாதபுரத்தில் இன்றே திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னில் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து பசும்பொன் செல்லும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பசும்பொன் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பரிதவிப்பு
இந்நிலையில், இன்று காலை இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி வரை செல்லும் அரசு ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் மற்றும் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் என்ன செய்வதென்று தெரியாமல்பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். திடீரென இப்படி முன்கூட்டியே முன்னறிவிப்பில்லாமல் பேருந்துகளை நிறுத்தியதால் பரிதவிப்புக்கு ஆளான பயணிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்து இயங்காது என பொதுமக்கள் மத்தியில் செய்தித்தாள்கள் அல்லது ஊடகங்கள் மூலம் முன்கூட்டி தெரியபடுத்தி இருக்கலாமே? எனக் கூறினர்.
போக்குவரத்து மாற்றம்
இதற்கிடையே இராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து அனைத்தையும்ம்
தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், திருவாடானை வழியாக போலீசார் மாற்றி அனுப்பி வைத்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






