--- --:--:-- --

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம் பெறும் சட்டசபை தொகுதிகள் எவை? பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

16

மிழகத்தில் சமீபத்தில் சில மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட நிலையில், அந்த மாவட்டங்களில் இடம்பெறும் சட்டசபை தொகுதிகள் எவை? என்ற பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் நிர்வாக மற்றும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் விறுவிறுவென கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்டன.

 

நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உதயமானது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமானது. காஞ்சிபுரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

இதேபோல் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்கள் ஆனது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளை தமிழக அரசு கோட்டம், வருவாய்த்துறை மட்டத்தில் பிரிவினை செய்திருந்தது. ஆனால் சட்டப்பேரவை தொகுதிகளில் சில இரு மாவட்ட எல்லைகளிலும் இடம் பெற்றதால் எந்த மாவட்ட நிர்வாகத்தில் எந்த சட்டசபை தொகுதி என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.இதன்படி  செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெறுகின்றன. அவை சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் ஆகும்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளும், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகளும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

 

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகளும்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

 

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளும்
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளும் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon