“பீகார் மக்கள் அனைவருக்கும் இலவச கொரொனா தடுப்பூசி!!” சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் வித்தியாசமான வாக்குறுதி இடம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜக கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் வேலையாக பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது தான் தேர்தல் அறிக்கையில் பிரதானமான வாக்குறுதியாக இடம் பெற்றுள்ளது.
பீகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 28-ந் தேதியும், நவம்பர் 3, 7 தேதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் கூட்டணியாக உள்ள பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நிதீஷ் குமார் தான் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்த்தரப்பில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரசும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தனித்து போட்டியிடுகிறது. நிதிஷ் குமாரை முதல்வராக ஏற்க மறுத்தும்,போதிய இடங்கள் ஒதுக்காததாலும் கூட்டணியை முறித்துக் கொண்டு கட்சியின் செயல் தலைவரான பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளார்.
அதிலும் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் மட்டும் லோக் ஜனசக்தி போட்டியிட்டு அக்கட்சியை தோற்கடித்து நிதிஷ்குமாரை முதல்வராக விடமாட்டேன் என சிராக் பஸ்வான் சபதமெடுத்துள்ளார். தேர்தலுக்குப் பின் பாஜக – லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி அமையும் என்றும் சிராக் பஸ்வான் கூறியுள்ளார். இதனால் இந்த தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு பெரும் சிக்கலும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பீகார் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்ட தேர்தலும் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
நேற்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் ரத்து, இலவச மின்சாரம், புதிய வேலை வாய்ப்புகள், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தீர்மானம் என ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதே போல் லோக் ஜனசக்தி நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வேலை வாய்ப்பில் பீகாரிகளுக்கே முன்னுரிமை என்ற வாக்குறுதி பிரதானமாக இருந்தது.
இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் இன்று பாட்னாவில் வெளியிட்டார். இதில் முதல் வாக்குறுதியாக பீகார் குடிமகன்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது தான் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. 8 மாதங்களாக கொரோனாவால் நாடே தத்தளிக்கும் நிலையிலும், இன்னும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சி முழுமை அடையாத நிலையிலும், பீகாரில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற பாஜகவின் வாக்குறுதி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






