கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம்..!
தமிழகத்தில் கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடும்படி முகக்கவசம் அணிய தவறினால் 200 ரூபாய் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற தவறினாலோ 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
சலூன்கள்,ஜிம்கள், வணிக அமைப்புகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு அறிவிக்கப்படும் நடைமுறைகளை மீறினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை பின்பற்ற தவறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்க வழிவகை செய்யும் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.






