--- --:--:-- --

மேகதாதுவில் படிக்கட்டுகள், இரும்புக் கம்பிகள் அமைப்பு அணை கட்டுமானத்திற்கு அடையாளம்..!

5

மேகதாதுவில் படிக்கட்டுகள் மற்றும் இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது அணை கட்டுமானத்திற்கான ஆரம்பக்கட்ட அடையாளம்; கர்நாடகா அங்கு அணை கட்டத் தயாராகி வருகிறது” என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார். மேகதாது பகுதியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய அவர், அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் எனக் கூறும் காங்கிரஸ் கட்சியினர், சென்னையில் இருந்து பேசுவதை விடுத்து நேரில் வந்து கள நிலவரத்தைப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று கர்நாடக மாநிலம் கணகபுரா பகுதியில் மேகதாட்டு பகுதியை நேரில் பார்வையிட்ட பின் ஓசூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கணகபுரா பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10 கிலோமீட்டர் கீழ் நோக்கி 1000 ம் அடி ஆழத்தில் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகள் ஒன்றாக இணையும் இடம் சங்கமம் ஆகும். இப்பகுதி சுற்றுலா தளமாக உள்ளது.
சங்கமத்திலிருந்து தமிழகம் நோக்கி காவிரி ஆறு ஓடத் தொடங்குகிற 3வது கிலோமீட்டரில் மேகதாட்டு என்ற இடம் உள்ளது.

 

 

இங்கு உயர்ந்த இரு மலைக்குண்றுகளுக்கு இடையே குறுகிய இடம் வழியாக தமிழக எல்லையில் காவிரி நுழைகிற இடத்தில் மேகதாட்டு அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். மலையடிவார சாலையிலிருந்து 150 அடி ஆழத்தில் ஆற்றின் தளமட்டத்திற்கு செல்ல புதிதாக படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். தளமட்டத்தில் அணை கட்டுவதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு இரும்பு கம்பிகள் கருங்கள் பாறையில் நடப்பட்டுள்ளது.

 

 

ஏற்கனவே அடர்ந்த வனப்பகுதி மற்றும் யானைகள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அணை கட்டுமானத்தை நியாயப்படுத்தும் விதமாக பொதுமக்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு பேரூந்து மூலம் சங்கமத்திலிருந்து அழைத்து சென்று வருகிறார்கள்.
இதன் மூலம் மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தயார் நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிற விதமாக அமைந்துள்ளது.

 

 

எனவே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை இணைந்து மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் கொண்டு பிரதமர் தலைமையில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைவளம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 

 

மேலும், காங்கிரஸ் கட்சியினர் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என சென்னையில் இருந்து கூறுவதை விட்டுவிட்டு இங்கு நேரில் வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உயர்மட்டக்குழு உறுப்பினர் ஓசூர் நடராஜன், திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon