செந்தில்பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனு : விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்
அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், அசோக்குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை, கடந்த ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.





