கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நால்வருக்கு ரூ.16000/- அபராதம் விதித்த காரமடை வனத்துறை !!!
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு, அன்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு பேர் வனப்பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வெள்ளியங்காட்டை அடுத்துள்ள அன்சூர் பகுதியை சேர்ந்த வீரையன், வெள்ளிங்கிரி,சின்னராஜ் மற்றும் பறையன்கோம்பை பகுதியை சேர்ந்த வேலன் என்பதும்,திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வனப்பகுதிக்குள் அத்துமீறு நுழைந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அவர்களை காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்த வனத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கள்ளச்சாராயம் காயச்சுவதற்காக திருட்டுத்தனமாக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக தலா ரூ.4000/- வீதம் நால்வருக்கும் ரூ.16000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்,கள்ளசாராயம் காய்ச்சிய குற்றம் தொடர்பான மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட நால்வர் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் மதுவிலக்கு அமலாக்கத்துறையினரிடம் காரமடை வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டனர்.
ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






