ரூ.2,500 கொடுப்பது எப்போது? விஜய் பதில் சொல்ல வேண்டும் – எல். முருகன்
பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 கொடுப்பது எப்போது..? முதலமைச்சர் விஜய் உடனடியாக பதில் சொல்ல வேண்டும். ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ. 2.500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு த.வெ.க அரசிடம் பதில் இல்லை.
மேற்குவங்கத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ. 3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்தபடி அன்னபூர்ணா யோஜனா திட்டம் செயல்பட்டது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.பெண்களுக்கு ரூ.3000 வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது பா.ஜ.க. ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன?
தேர்தல் காலத்தில் அண்ணன், தம்பி, மாமா என்ற உணர்வுபூர்வமான பேச்சுகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அந்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை த.வெ.க அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், இது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மிகப்பெரிய தேர்தல் மோசடி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. தமிழக மக்களும், குறிப்பாக பெண்களும், தாங்கள் அளித்த நம்பிக்கைக்கு உரிய பதிலை முதலமைச்சரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.





