--- --:--:-- --

100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மாற்றம்..!

5

மிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் சூரைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

 

 

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் (ஜூன் 17) நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

 

மேலும் உள் மாவட்டங்களான நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சூரைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

 

 

இந்த சூரைக்காற்றின் காரணமாகப் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்தன. புஞ்சை புளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் பவானிசாகர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் மழைநீர் குட்டை போலத் தேங்கியதால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவானது. மழையின் போது வீசிய பலத்த காற்றினால், கொளத்தூர் கிராமத்தில் மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு மேய்ந்துகொண்டிருந்த ராசு என்பவருக்குச் சொந்தமான இரண்டு மாடுகள், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

 

 

புதுக்கோட்டை நகர், கொத்தமங்கலம், அரந்தாங்கி, கூத்தாடிவயல், அரிமலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயில் மிகத் தீவிரமாகச் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

 

 

கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சிவகாசி, சூலக்கரை, பாண்டிய நகர், பாரைப்பட்டி, சாட்சியாபுரம், ஏரிச்சத்தம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிற்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், மணிமங்கலம், சோமங்கலம், படப்பை, ஒரகடம், தண்டலம் ஆகிய பகுதிகளில் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது. தென் தமிழகத்தின் திருநெல்வேலி நகர், கிருஷ்ணாபுரம், ரெட்டியார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வானிலை மாற்றங்கள் மற்றும் மழை தீவிரமடையும் பட்சத்தில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Leave a Reply

Right Menu Icon