மலேசியாவில் தத்தளிக்கும் 1,000 தமிழர்கள்; போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குமுறல்
விமானப் போக்குவரத்து இல்லாததால் மலேசியா நாட்டில் 1,000 தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர். மேலும் அவர்களை அங்குள்ள போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குமுறி வருகின்றனர்.கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமானச் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் திருமணம், சுற்றுலா, வேலை நிமித்தமாக மார்ச் மாதம் மலேசியா சென்ற 1,000 தமிழர்கள், விமானச் சேவை ரத்தானதால் அங்கேயே முடங்கினர்.
அவர்களை அந்நாட்டு அரசு விடுதிகளில் மொத்தமாக தங்க வைத்துள்ளது. மேலும் மலேசியாவிலும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாததால் அவர்களுக்கு உணவு கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தவிக்கும் மலேசியர்களை அழைத்து செல்ல மலேசிய அரசு ஏப்.1, 2, 4 ஆகிய தேதிகளில் விமானம் ஏற்பாடு செய்தது. அந்த விமானங்களில் தங்களை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென தமிழர்கள் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், சுற்றுலாவுக்காகச் சென்ற பலருக்கு விசா காலம் முடிந்துவிட்டது.விசா காலத்தை நீட்டிக்காமல் அவர்களை விசாரணை என்ற பெயரில் அந்நாட்டு போலீஸார் கொடுமைப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்களை மீட்டு இந்தியா கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மலேசியாவில் தவிக்கும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நகரத் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெயினார் கூறுகையில், “நாங்கள் திருமணத்திற்காக கோலாலம்பூர் வந்தோம். ஊரடங்கால் இங்கு தங்கியுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களை மலேசியா போலீஸார் கொடுமைப்படுத்தி வருகின்றனர். பெண்கள், சிறுவர்கள் என்று பாராமல் கைவிலங்கிட்டு இரவு முழுவதும் விசாரணை நடத்துகின்றனர். எங்களது விசா காலத்தை நீட்டிக்காமல், அடித்து துன்புறுத்துகின்றனர். எங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.






