--- --:--:-- --

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தனியாக சம்பள உயர்வு இல்லை!

5

மாத சம்பளம் உயர்வு, 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கூறி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதற்கு கூட்டுறவுத்துறை திட்டவட்டமான ஒரு பதிலை அளித்துள்ளது.

 

 

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் விதி 110-ன் கீழ் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்புச் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ஊழியர்கள் கூட மாதம் 20,000 ரூபாய்க்கும் குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும், இதனால் அவர்களின் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது கடினமாக இருக்கிறது என சங்கம் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

 

 

மேலும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 2026 மார்ச் 5 அன்று வெளியிட்ட அரசாணையைச் மேற்கோள்காட்டி, ஊழியர்களுக்குச் சிறப்புச் சம்பள உயர்வு வழங்கப்பட்டதையும் சங்கம் சுட்டிக்காட்டியது. இக்கோரிக்கை தொடர்பாகக் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் நலன்) ஊழியர்கள் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் திட்டவட்டமான ஒரு பதிவை தெரிவித்துள்ளார்.

 

 

அதன்படி, இதில் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அகவிலைப்படி (DA) அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருவதால், நியாயவிலைக் கடை (ரேஷன் கடை) ஊழியர்களுக்குத் தனியாகச் சம்பள உயர்வு வழங்கத் தேவையில்லை எனக் கூட்டுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருவதால், தனியாக ஊதிய உயர்வு அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும் தற்போதுள்ள நடைமுறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே சிறப்புச் சம்பள உயர்வு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை மாற்றியமைக்க எந்தவித விதியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon