--- --:--:-- --

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு!

1

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பரவிய தகவல்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக-வைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளதையும், பெண் ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல், பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்; தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் திங்கட்கிழமை விசாரித்தபோது, ஆட்சியரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது. எம்எல்ஏ-வின் மாண்பை குலைத்துவிடும் என தெரிவித்த நீதிபதி, புகார் வந்துள்ளதா என தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த காவல்துறை, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதைப் படித்த பிறகு, பெண்களுக்கு எதிரான பதிவுகளை நீக்க ஏற்கனவே வேறு வழக்கில் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை ஏன் நீக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

 

ஆனால், உடனடியாக பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என காவல்துறை கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, ஒருவருக்கு அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு முடிந்த பிறகுதான் நீக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். தலைமைச் செயலாளர், தூய்மைப் பணியாளர், ஆட்சியர் என யாராக இருந்தாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; பெண்களுக்கு எதிரான புகார் குறித்து மாநில அளவில் குழுக்கள் ஏன் அமைக்கவில்லை? வழக்கில் புலன் விசாரணை அதிகாரி யார்? என கேள்வி எழுப்பினார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. விசாரிப்பதாகக் கூறிய நிலையில், எம்.எல்.ஏ.-வுக்கு எதிரான புகார் என்பதால் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. கண்காணிக்க வேண்டும் என கூறினார். மேலும், யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சிப்பது தெரிந்தால், அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என நீதிபதி கூறியபோது, தமிழக அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

ஜூலை மாதமே ஆட்சியர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; அப்படி எடுத்திருந்தால் ஆட்சியர் புகார் அளித்திருக்க மாட்டார். உள் விசாரணை குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், தன்னையும் வழக்கில் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என பெண் ஆட்சியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, எஸ்.பி. விசாரணையை ஒரு ஐ.ஜி. கண்காணிக்க வேண்டும்; இந்த வழக்கில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்; வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் 22-ல் தாக்கல் செய்ய வேண்டும்; விசாரணையின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 27-ல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் BNS 75, ஒருவரை தவறான நோக்கத்துடன் பின்தொடர்தல் 78(2) உள்ளிட்ட பிரிவுகளில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon