திருப்பரங்குன்றம் உச்சியில் தீபத் தூணை சுற்றி தடுப்புகள்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் செவ்வாய்க்கிழமை மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 132 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 5,618 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக சுமார் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனித்தனி பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தென் மாவட்டங்களில் பணியாற்றும் ஒரு துணை காவல் ஆணையர், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 21 டி.எஸ்.பி-க்கள் என மொத்தம் 28 காவல் உயர் அதிகாரிகள் சிறப்புப் பாதுகாப்புப் பணிக்காக மதுரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஒரு எஸ்.பி தலைமையில் 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 187 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தர்கா அமைந்துள்ள பகுதியில் ஒரு எஸ்.பி, ஒரு ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி-க்கள் மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 190 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மலைக்குச் செல்லும் பழைய மற்றும் புதிய படிக்கட்டுப் பாதைகள், நெல்லித்தோப்பு, தீபத்தூண் அமைந்துள்ள இடம் ஆகிய அனைத்து முக்கியப் பகுதிகளிலும் போலீசார் சுழற்சி முறையில் நிறுத்தப்பட்டுள்ளனர். 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலில் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணை சுற்றி பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படவில்லை. பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





