சட்டமன்ற அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகள் தாமதம்!
புதுச்சேரியில் சென்ற முறை நல்லாட்சி நடத்தியதால் மக்கள் மீண்டும் உங்கள் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்ற விதத்தில் சில அரசு துறையில் சில உயரதிகாரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தற்காலிக சபாநாயகர் மனு அளித்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தங்கள் சீரிய தலைமையில் புதிய அரசு அமைந்து 7 மாத காலம் ஆகிறது. தங்களின் அரசில் பல புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ளாட்சித் துறைக்கு உட்பட்ட சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்கள், வடிகால்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி கட்டிடங்கள், குளம் மற்றும் நீர்நிலைகள் சீரமைத்தல், நடைபாதைகள் சீரமைத்தல் போன்ற மக்களுக்கு அத்தியாவசிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படுகிறது.
கடந்த ஆட்சியில் ரூ.2 கோடியாக இருந்த சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியை ஒவ்வொரு தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் குறித்து தாங்கள் ரூ.3 கோடியாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். சட்டமன்றத்தின் அறிவிப்புகளை உடனடியாக செயல்வடிவம் படுத்த வேண்டிய அரசின் துறைகள் திட்டமிட்டு காலதாமதம் செய்வதால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தப்படுகிறது.
குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியை செயல்படுத்த தாங்கள் அனுமதி அளித்து பல நாட்கள் ஆகியும் நிதி துறையின் திட்டமிட்ட அலட்சியமான காலதாமதத்தினால் இன்றுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் மேற்கூறிய எந்த அவசிய பணிகளையும் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாக்களித்த மக்கள் அவரவர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அவசியமான பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தும் போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் சட்டமன்ற உறுப்பினர்களும் செய்வதறியாது உள்ளனர். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் தேவையற்ற அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டதை உடனடியாக செயல்படுத்த வேண்டியது உயரதிகாரிகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். ஒருமாத காலத்திற்குள் அரசாணை வழங்க வேண்டிய இந்த உத்தரவு மூன்று மாதத்திற்கு மேலாகியும் நடைமுறைக்கு வரவில்லை. அடுத்த நிதியாண்டு வருவதற்கு இன்னும் மூன்று நான்கு மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற கால தாமதம் ஏற்புடையது அல்ல.
தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் உங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்ற விதத்தில் அரசு துறையில் சில உயரதிகாரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது. எனவே முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலன் கருதி உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை, நிதித்துறை உயரதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட உயர்மட்ட கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் திட்டமிட்டு காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





