ஈரோட்டில் 3 இடங்களில் கலைஞர் கருணாநிதி சிலைகள் சேதம் – கி.வீரமணி கண்டனம்
ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலைகள் மற்றும் திமுக அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 23) நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் வெவ்வேறு இடங்களில் கலைஞர் கருணாநிதியின் சிலைகளையும், திமுக அலுவலகங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, முனிசிபல் காலனி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் அமைந்துள்ள கலைஞர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கலைஞர் சிலையின் கண்ணாடியும், முனிசிபல் காலனியில் சிலைக்குக் கீழே செயல்பட்டு வரும் நூலகத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மணல்மேடு பகுதியில் உள்ள திமுக ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தின் முன்பக்கக் கண்ணாடிகளும், மொடக்குறிச்சியில் உள்ள திமுக இளைஞரணியின் ‘அன்பகம் உதயம்’ அலுவலகத்தின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துபவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதைப் போல, கலைஞர் சிலைகளைச் சேதப்படுத்தியவர்களையும் அவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விளக்கங்கள் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிவகுத்துவிடக் கூடாது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் கலைஞர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்குக் கண்டனம்! ஈரோடு – பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு முனிசிபல் காலனி, மொடக்குறிச்சி என ஒரே மாவட்டத்தில் மூன்று இடங்களில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைகள் நேற்றிரவு (23.11.2026) சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் சிலைக்குக் கீழே அமைந்துள்ள நூலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் மொடக்குறிச்சியில் உள்ள ‘அன்பகம் உதயம்’ திமுக இளைஞரணி அலுவலகத்தின் முகப்புக் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்குத் திராவிடர் கழகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவோரை எல்லாம் ‘மனநோயாளிகள்’ என்று காவல்துறை சொல்லிவந்ததைப் போல, இப்போதும் மூன்று இடங்களில் கலைஞர் சிலையைச் சேதப்படுத்தியுள்ள நபரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ள காவல்துறை, அவரையும் ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று சொல்லி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும்! சிக்கியவர்களைத் தப்ப வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே தவிர வேறல்ல! திராவிட இயக்கத் தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் குண்டர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – கி.வீரமணி தலைவர்
அதேபோல், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைதளப் பதிவில், வாழ்நாளில் தனக்கு எதிரான தாக்குதல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர் கலைஞர் எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கலைஞரின் சிலை கடப்பாரையால் தாக்கப்பட்டபோதுகூட, ‘அந்தச் சிறியவன் எனக்குப் பின்னால் குத்தவில்லை; நெஞ்சில்தானே குத்தினான்’ என்று அவர் கூறியதை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், ஈரோட்டில் மூன்று இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இச்செயலில் ஈடுபட்டவர் மற்றும் அவரைத் தூண்டியவர்களைக் கண்டறிந்து அரசு, காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





