--- --:--:-- --

திருச்சியில் சாலைப் பணிகள் தடுத்து நிறுத்தம்!

8

பாதாள சாக்கடை பணிகளை முடிக்காமல் சாலை போடுவதற்கு திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட சண்முகா நகர் பகுதிகளில் சில தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இங்குள்ள 3-வது தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

 

 

அப்போது சண்முகா நகர் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் தலைவர் வேலாயுதன், செயலாளர் குமரன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சாலை போடும் பகுதிக்கு சென்று பாதாள சாக்கடை பணிகளை பூர்த்தி செய்த பின்னர் சாலை போடுங்கள் என தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 

பின்னர் வழக்கறிஞர் சி முத்துமாரி செய்தியாளர்களிடம் கூறும்போது; பொதுவாக மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் சாலை அமைக்க உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, சாலை அமைக்கும்போது பழைய சாலையை தோண்டி எடுத்து, சாலையின் உயரம் மிகாமல் அதே அளவுக்கு போட வேண்டும். ஆனால், இங்கே அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய சாலைகள் மீது ஜல்லியை போட்டு புதிய சாலை போடுகிறார்கள். இதனால் வீட்டின் மட்டம் கீழே சென்று சாக்கடை கழிவுநீர் வீட்டுக்குள் வருகிறது. அதுமட்டுமல்லாமல். பாதாள சாக்கடை பணிகளும் நிறைவடையவில்லை.

 

 

இந்த பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே, பாதாள சாக்கடை பணிகளை முடித்த பின்னர் சாலையின் இரு பக்கங்களிலும் முறையாக வடிகால் அமைத்து அதன் பின்னர் பழைய சாலைகளை தோண்டி எடுத்து புதிய சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் அதுவரை இந்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றார். சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon