புதிய மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணிக்கும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் கிண்டி, கோட்டூர்புரம், போரூர் உள்பட 5 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 15 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான் கருவிகள் உள்ளிட்டவை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம், போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம், கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகம், கிண்டி ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் விரிவான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணிக்க உள்ளனர். பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் முதலமைச்சர் விஜய்யும் பயணிக்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





