பனைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில் ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டி விநியோகம் சாத்தியம் எவ்வாறு? என பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வியெழுப்பி உள்ளார்.
திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு தமிழக பட்ஜெட்டில் முதன் முறையாக வேளாண்மைத் துறைக்கென தனியாக பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பனை பாதுகாப்பை கையில் எடுத்து பனை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றார் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பனை தொடர்பான அறிவிப்பில் சில பின்னடைவுகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
காலம் கடந்த நடவடிக்கை!
காரண காரியமின்றி பனைகளை வெட்டக் கூடாது என்பது அந்த அறிவிப்பின் அம்சம் என்றாலும், ஆட்சியரின் அனுமதி பெற்று பனைகளை வெட்டலாம் என்ற உட்கூறு பனை வெட்ட தடை செய்யும் சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லை. 2020 ஜனவரியில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த வழிகாட்டுதல் உத்தரவில் பனைகளை வெட்டினால் தண்டனை என்ற சாராம்சத்தை ஏற்கனவே அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.
மண்ணுக்கு பயன்தரும் பனைகளை ஏன் வெட்டக் கூடாது என்பதன் காரணத்தையும் அந்த வழிகாட்டுதல் உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் தமிழக அரசின் பார்வை பனையை நோக்கி திரும்பியிருப்பது ஆறுதலை அளித்தாலும் அரைகுறை சட்டமாகவே பனை பாதுகாப்பு அறிவிப்பு தோன்றுகிறது.
படிப்படியாக அழிந்து வரும் பனையேறும் தொழில்!
அறிவிப்பின் மற்றொரு கூறு என்னவெனில், ரேசன் கடைகள் வாயிலாக தரமான பனங்கருப்பட்டி விநியோகித்தல். தமிழகத்தில் பனைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அரசு தடை விதித்த பிறகும் பனைகள் வெட்டப்படுவது குறைந்தபாடில்லை. பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு காவல்துறை அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதால் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு பனையேறும் தொழிலை யாரும் கற்றுக் கொடுப்பது இல்லை. இளம் சந்ததியினரும் இந்த தொழிலில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. இதனால் பனையேறும் தொழிலும் படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.
வெள்ளைச்சீனி அரசியல்…
1970களில் தமிழகம் முழுவதும் 10 கோடிக்கும் மேலாக பனைகள் இருந்த காலக்கட்டத்திலேயே கருப்பட்டி உற்பத்தி என்பது மிகக்குறைவாகத்தான் இருந்தது. அடுத்தடுத்த காலக்கட்டங்களில் வெள்ளைச்சீனி அரசியல் என்பது பனங்கருப்பட்டியின் பயன்பாட்டை அழித்தொழித்து விட்டது. பயன்பாடு குறைந்ததும் பனைகளின் அழிவுக்கு மற்றொரு காரணமாகவே குறிப்பிடலாம். உற்பத்தி குறைவு என்பது பனங்கருப்பட்டியின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது. இதனால் சாமானியர்கள் பனங்கருப்பட்டியின் பயன்பாட்டைக் குறைத்து வெள்ளைச் சீனிக்கு முழுமையாகவே மாறிவிட்டனர்.
சாத்தியமா?
இலங்கை பனை அபிவிருத்தி சபை மேற்கோள் காட்டியுள்ள குறிப்பு ஒன்றில் 1989ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக்டன் கருப்பட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த காலக்கட்டத்தை ஒப்பிடும் நிலையில் தற்போது பனையேறும் தொழிலாளர்களும், பனைகளும் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், ரேசன் கடைகளில் தரமான பனங் கருப்பட்டி விநியோகிப்பது என்பது சாத்தியமற்ற அறிவிப்பாகவே இருக்கிறது.
கண்துடைப்பா?
அடுத்ததாக பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகையை வைத்து மாநிலம் முழுமைக்கான ஒரு இயக்கத்தை செயல்படுத்துவது என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது. ஏற்கனவே தோற்றுவித்து தற்போது செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கும் பனை தொழிலாளர்கள் நல வாரியத்திற்கே தமிழகத்தின் பல பகுதிகளில் சொத்துக்களும், பயிற்சி மையங்களும், விற்பனை அங்காடிகளும் இருக்கின்ற சூழ்நிலையில் அதற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கி மேம்பாடு அடையச் செய்வதை விடுத்து, இப்படி ஒரு இயக்கத்தை புதிதாக தோற்றுவித்து அதன் மூலம் எத்தகைய செயல்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்ற தெளிவான குறிப்புகள் அதில் இடம்பெறவில்லை.
பனை மேம்பாட்டு இயக்கத்திலும் தங்களது கட்சியினருக்கு பதவிகளை வழங்கினால் அந்த இயக்கத்தை தோற்றுவித்ததில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். பனையைப் பற்றி அறிந்து தெரிந்தவர்களை, பனை அபிவிருத்திக்காக உழைத்தவர்களையும் அந்த பொறுப்புகளில் நியமித்தால் மட்டுமே அரசின் இலக்கு வெற்றி பெறும். பனை விதைப்புக்கும் மாநில அளவில், மாவட்ட மற்றும் கிராமிய அளவில் அரசின் சார்பில் குழுக்கள் அமைத்து பனை விதைப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும், வறட்சிப்பகுதிகளிலும், தேரிக்காட்டு பகுதிகளிலும் பனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
பனைவாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வி

பனை விதைப்பை தீவிரப்படுத்த வேண்டும்:
பனை மேம்பாட்டு இயக்கத்திலும் தங்களது கட்சியினருக்கு பதவிகளை வழங்கினால் அந்த இயக்கத்தை தோற்றுவித்ததில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். பனையைப் பற்றி அறிந்து தெரிந்தவர்களை, பனை அபிவிருத்திக்காக உழைத்தவர்களையும் அந்த பொறுப்புகளில் நியமித்தால் மட்டுமே அரசின் இலக்கு வெற்றி பெறும். பனை விதைப்புக்கும் மாநில அளவில், மாவட்ட மற்றும் கிராமிய அளவில் அரசின் சார்பில் குழுக்கள் அமைத்து பனை விதைப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும், வறட்சிப்பகுதிகளிலும், தேரிக்காட்டு பகுதிகளிலும் பனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
அறிவிப்புகளை வெளியிடுவது பெரிய காரியமல்ல. விடுத்த அறிவிப்பை வெற்றிகரமாக செயல்படுத்துவதில்தான் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆகவே தமிழக அரசு இவற்றை கருத்தில் கொண்டு பனை அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டும் என பனை வாழ்வியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.