பா.ம.க-வை அட்டாக் செய்த மிருதுளா..!
சட்டப்பேரவையில் முதல்முறை எம்.எல்.ஏ-வாக நுழைந்து கவனம் ஈர்த்த பா.ம.க உறுப்பினர் சவுமியா அன்புமணியை முன் நிறுத்தும் பின்னணி அக்கட்சியின் கடந்தகால அரசியல் சாதிய வன்முறை வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் என்று எஸ்.எஃப்.ஐ மாநிலத் தலைவர் மிருதுளா பா.ம.க-வை அட்டாக் செய்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பா.ம.க ஆதரவாளர்களுக்கும் இடதுசாரி/வி.சி.க ஆதரவாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் வெடித்துள்ள சூழலில், மிருதுளாவுக்கு எஸ்.எஃப்.ஐ மற்றும் ‘லெஃப்ட் லேன்’ ஊடகம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்ற உறுப்பினர்களில் பலரும் முதல்முறை எம்.எல்.ஏ-க்கள்தான். அவர்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவியும் எம்.எல்.ஏ-வுமான சவுமியா அன்புமணியும் ஒருவர். சட்டப்பேரவையில் ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர் போல அவருடைய உரைகளும் செயல்பாடுகள் அமைந்தன. பல தரப்பு பாராட்டுகளையும் பெற்றார்.
கிராமங்களில் ஏழை எளிய உழைக்கும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களின் கழுத்தில் இருக்கும் தாலியில் வெறும் மஞ்சள் கிழங்குதான் இருக்கிறது, ஆனால், ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகிறது. அதனால், மதுவை ஒழிக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி கிராமப்புர பெண்ககளின் ஏழ்மை நிலையையும் மதுவால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் சட்டப்பேரவையில் எடுத்துப் பேசியது பெரும் கவனம் பெற்றது.
சவுமியா அன்புமணியின் சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தரவுகள், நிதானம், தெளிவு, எளிய மொழி வளம், விவரிப்புகளில் சுவாரசியம், தலைமை பண்புகள் கொண்ட உடல்மொழி.. என்று அற்புதமாக தன் கடைமையை செய்கிறார் சகோதரி சவுமியா அன்புமணி. அரசியல் நிலைப்பாடு வேறு. மக்களுக்கான உரிமைகள் வளங்கள் வேறு என்பதை உணர்ந்து வைத்து உள்ளார். பசுமை தாயகம் இயக்கப்பணி அவரை ஆளுமைமிக்க தலைவியாக மாற்றி இருக்கிறது. சிவில் சமூகத்தின் குரல் சகோதரி சவுமியா அன்புமணி என்பது மாற்று கருத்து அல்ல.” என்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் அமைப்பின் (எஸ்.எஃப்.ஐ) மாநிலத் தலைவர் மிருதுளா, செவ்வாய்க்கிழமை (08.09.2026) நடைபெற்ற தலித் பெண்கள் மாநாடு குறித்து ‘லெஃப்ட் லேன்’ (Left Lane) தமிழ் ஊடகத்திற்கு அளித்த காணொளியில், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணியின் சட்டமன்ற உரை சார்ந்து அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் மக்கள் பிரச்சனைகளை பேசும் தலைவராக சித்தரிக்கப்படுவதைக் குறிப்பிட்டு பா.ம.க-வின் கடந்தகால வரலாறு என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மிருதுளா அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: “சட்டமன்றத்தில் எல்லாரும் பாராட்டக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினராக யார் இருக்கிறார்கள் என்றால் சவுமியா அன்புமணி. அவர் நன்றாக பேசுகிறாரா என்றால் அதில் எல்லாம் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், இங்கே ஒரு தனிப்பட்ட நபரை முன்னிறுத்துவதற்கான காரணம் பா.ம.க-வுடைய வரலாற்றை இன்றைக்கு மறைக்கப் பார்க்கிறார்கள். இளவரசன் திவ்யா படுகொலையில், யார் இளவரசனை கொலை செய்தது. அந்த படுகொலைக்கு பின்னாடி எந்த கட்சி இருந்தது என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தான். ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை சார்ந்தவர்கள் தான் அந்த சாதியை சார்ந்தவர்களுக்காக தான் அந்த கட்சி நடத்துகிறார்கள்.
அவர்கள் கட்சி நடத்துவதன் நோக்கமே சாதியாக மக்களை அணி திரட்டுவது தான் நோக்கம். இன்றைக்கு சவுமியா அன்புமணி பிம்பத்தை காட்டி காட்டி அந்த கட்சி செய்த அவ்வளவு கொலைகளையும் இன்றைக்கு நியாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த வரலாறு எல்லாம் இப்போது இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது இருக்கிறது. அவர்கள் சட்டமன்றத்தில் ரொம்ப பாவமாக என்ன பேசுகிறார்கள் என்றால், பெண்கள் கிராமப்புறங்களில் வெறும் மஞ்ச தாலி தான் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று கருணை உள்ளத்தோடு தாய் உள்ளத்தோடு பேசுகிறார்கள்.
ஆனால், தலித் பெண்கள் போட்டிருக்கக் கூடிய அந்த மஞ்ச தாலியைக்கூட விட்டு வைக்காமல் தாலியறுத்த கட்சி தான் பா.ம.க கட்சி என்ற ஒரு விஷயத்தை மக்களிடம் பேச வேண்டியது இருக்கிறது. ஏனென்றால், அதற்கு பின்னால் அவ்வளவு இளைஞர்களுடைய கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது, அத்தனை பேர் தங்களுடைய குழந்தைகளை இழந்து விட்டு இந்த சாதியினால் வந்து நின்று இருக்கிறார்கள். எனவே, இதற்கெல்லாம் பின்புலமாக இருந்த ஒரு கட்சி தான் பா.ம.க என்பதையும் இன்றைக்கு இளைஞர்களிடம் கொண்டு போக வேண்டியது இருக்கிறது.
தனிப்பட்ட நபர்கள் என்பது என்றைக்குமே கிடையாது, அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஐடியாலஜி (சித்தாந்தம்) என்னவோ அதுதான் பேசும். எனவே ஒருத்தர் தேன் ஒழுக பேசுகிறார்கள், இனிக்க இனிக்க பேசுகிறார்கள் என்பது மட்டும் கிடையாது அதற்கு பின்னாடி ரத்தமும் சதையுமாக வரலாறுகளை எடுத்துச் சொல்ல முடியும் என்பதை பொது மக்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கிறது” என்று பேசி உள்ளார்.
எஸ்.எஃப்.ஐ மாநிலத் தலைவர் மிருதுளாவின் இந்த பேச்சு, பா.ம.க-வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. பா.ம.க ஆதரவாளர்கள் பலரும் மிருதுளாவுக்கு கடுமையான எதிர்ப்பையும் மோசமான வசைகளையும் வீசி வருகின்றனர். அதே நேரத்தில், மிருதுளாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு எஸ்.எஃப்.ஐ நிற்கும் என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் தோழர் சி.மிருதுளாவை குறிவைக்கும் சாதியவாதிகளுக்கு இந்திய மாணவர் சங்கம் வன்மையான கண்டனம்.
எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் தோழர் சி.மிருதுளா வெளிப்படுத்திய சமூக, அரசியல் கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் குறிவைத்து தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் சாதிய சக்திகளை கண்டிக்கின்றோம்.” என்று எஸ்.எஃப்.ஐ தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





