சீன அத்துமீறல் குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன் எனக் கேள்வி?
சீன துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியது தொடர்பாக பிரதமரிடம் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் அத்து மீறல் தொடர்பாக பிரதமர் எந்த தகவலையும் வழங்காமல் மவுனம் காப்பது முழு தேசத்தையும் கவலை அடைய வைத்து இருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ப சிதம்பரம் இதுபோன்று மவுனம் காக்கும் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ உலகில் வேறு எங்காவது இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். சீன துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி ஏழு வாரங்கள் கடந்தும் அது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன துருப்புகள் நடத்திய தாக்குதலில் நாட்டை காப்பதற்காக தனது உயிரையே தியாகம் செய்து இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட வீரர்களுக்கு சிதம்பரம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.






