--- --:--:-- --

மகாராஷ்டிர மின்திட்ட மதிப்பீட்டை 99% குறைத்த அதானி நிறுவனம்!

6

அதானி குழுமத்திற்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் அமைக்கவுள்ள 1,500 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகையை ரூ. 5,675 கோடியிலிருந்து ரூ. 56.75 கோடியாகக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டக் கோரியுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு செய்த ஆவணங்கள் மற்றும் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

 

திட்ட மதிப்பீட்டுத் தொகையை நூறில் ஒரு பங்காகக் குறைத்திருப்பதன் மூலம், வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிதியும் ரூ. 227 கோடியிலிருந்து வெறும் ரூ. 2.27 கோடியாகக் குறைகிறது. திட்ட மதிப்பீட்டை ரூ. 56.75 கோடியாக மாற்றியமைக்கும் கோரிக்கையை மகாராஷ்டிர வனத்துறை அண்மையில் ஏற்றுக்கொண்டது. அதன்படி, அந்நிறுவனம் சகயாத்ரி புலிகள் காப்பகத்தின் வங்கிக் கணக்கில் ரூ. 56.75 லட்சத்தை (ரூ. 56.75 கோடியில் 1 சதவீதம்) செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை தேசிய வனவிலங்கு வாரியம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்தத் திட்டத்தின் மதிப்பீடு தவறாகக் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, சதாரா மாவட்ட கௌரவ வனவிலங்குக் காப்பாளர் ரோகன் படே கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமரின் குறைதீர் இணையதளத்திலும், மகாராஷ்டிர முதலமைச்சரின் ‘ஆப்லே சர்க்கார்’ குறைதீர் இணையதளத்திலும் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி மாநில வனத்துறைக்கு இது குறித்து முன்னுரிமை அடிப்படையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மாநில வனத்துறையும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

 

 

1,500 மெகாவாட் திறன் கொண்ட தாராலி நீரேற்று மின் திட்டம், தாராலி அணை நீர்த்தேக்கத்தில் அமையவுள்ளது. சதாரா மாவட்டத்தின் படான் தாலுகாவில் உள்ள நிவாடே, தொண்டோஷி, களம்பே மற்றும் ஜாலு ஆகிய கிராமங்களில் 150.74 ஹெக்டேர் வனமற்ற நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில வனத்துறையின் தகவல்படி, இத்திட்டம் சகயாத்ரி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான சதாராவில் உள்ள கொய்னா வனவிலங்கு சரணாலயத்தின் சூழலியல் உணர்திறன் மண்டலம் வழியாகச் செல்கிறது. படான் தாலுகாவில் உள்ள தொண்டோஷி அருகே தற்போது பணிகள் நடைபெற்று வரும் திட்ட இடத்தை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழு நேரில் சென்று பார்வையிட்டது.

 

 

திட்டச் செலவு தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, “தாராலி நீரேற்று மின் திட்டத்தின் அனைத்துக் கூறுகளும் படான் தாலுகாவில் உள்ள மூன்று வருவாய் கிராமங்களின் தனியார் நிலங்களுக்குள்ளேயே அமைந்துள்ளன; இதில் வனநிலம் எதுவும் இல்லை. இத்திட்டம் செயல்படும்போது இப்பகுதியின் கீழ்நிலைச் சூழலியல், சுற்றுச்சூழல், காடுகள் அல்லது வனவிலங்குகளுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

 

உண்மையில், இரண்டு நீர்த்தேக்கங்களுக்கு இடையே ஒரே நீரை நகர்த்துவதால் உருவாகும் சிறிய குளங்கள் உள்ளூர்ச் சூழலியலுக்கு நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்; ஏனெனில், நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள காற்றில் ஈரப்பதம் இருப்பதால், ஆண்டு முழுவதும் அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு அது உதவியாக இருக்கும்” என்று பதிலளித்தார். ஆனால், திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு குறித்த குறிப்பிட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

 

 

 

இவ்வாண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மகாராஷ்டிர வனத்துறையிடம் தாக்கல் செய்த சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், திட்டச் செலவை ரூ. 56.75 கோடியாக மாற்றியமைக்குமாறு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கோரியிருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப் பரிந்துரைத்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 2025 பிப்ரவரி 11-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், திட்டச் செலவு ரூ. 5,675 கோடி எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சுற்றுச்சூழல் அனுமதிக்குப் பிறகு, மாநில வனவிலங்கு வாரியம் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி கூடி இத்திட்டம் குறித்துப் பரிசீலித்தது. அப்போது 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பிற்காக சகயாத்ரி புலிகள் காப்பகத்தின் வங்கிக் கணக்கில் திட்டச் செலவில் 4 சதவீதத் தொகையை அந்நிறுவனம் செலுத்த வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாகும்.

 

 

 

பெயர் வெளியிட விரும்பாத மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொய்னா வனவிலங்கு சரணாலயத்தின் சூழலியல் உணர்திறன் மண்டலம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, சரணாலயத்தைச் சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதி சூழலியல் உணர்திறன் மண்டலமாகக் கருதப்படுகிறது. தாராலி திட்டம் இந்த மண்டலத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, சூழலியல் உணர்திறன் மண்டலத்தில் திட்டங்களை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் வனப் பாதுகாப்பிற்காகத் திட்டச் செலவில் 4 சதவீதம் வரை செலுத்த அறிவுறுத்தப்படுகின்றன. அதன்படி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சகயாத்ரி புலிகள் காப்பகத்திற்கு ரூ. 227 கோடி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon