திருச்சியில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாய்க்காலைக் கடந்து மயானத்திற்குச் செல்ல முறையான பாலம் இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை உறவினர்களும் பொதுமக்களும் தண்ணீருக்குள் இறங்கி தோளில் சுமந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதியான ஒரு பாலம்கூட இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதற்குக்கூட மக்கள் போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பந்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டாரப்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கியப் பிரச்சினையாக தட்டான்குளம் வாய்க்காலைக் கடந்து மயானத்திற்குச் செல்வதற்குப் பாலம் இல்லாதது இருந்து வருகிறது.
இங்குள்ள மக்கள் வாய்க்காலைக் கடந்து மறுகரையில் அமைந்துள்ள மயானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், வாய்க்காலைக் கடப்பதற்கு முறையான பாதையோ, பாதுகாப்பான பாலமோ இதுவரை அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், அப்பகுதியில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களின் உடலை மயானத்திற்குக் கொண்டு செல்வது பெரும் சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாகச் செல்லும்போது, சடலத்தை எடுத்துச் செல்வதில் கூடுதல் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் அன்றாடத் தேவைகளுக்காகவும் இந்தப் பகுதியில் போதிய போக்குவரத்து வசதியின்றி சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கோட்டாரப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும் அப்பகுதி மக்களும் மயானத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது தட்டான்குளம் வாய்க்காலைக் கடக்கப் பாலம் இல்லாததால், வேறு வழியின்றி தண்ணீருக்குள் இறங்கினர். தொடர்ந்து, தண்ணீர் ஓடும் வாய்க்காலில் இறங்கி, ராஜசேகரனின் உடலைத் தோளில் சுமந்தபடி மறுகரைக்குக் கொண்டு சென்றனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்ததுடன், அடிப்படை வசதிகள் இல்லாத நிலை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஒருவரின் இறுதிப் பயணத்தைக்கூடப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை இருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தட்டான்குளம் வாய்க்காலின் குறுக்கே பொதுமக்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்குப் போதிய வசதிகளுடன் கூடிய பாலத்தை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழாமல் அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





