ரயில் முன் பாய்ந்து தாய், மகன் விபரீத முடிவு..!
விருதுநகர் சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவருக்கு முதல் திருமணம் மூலம் 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர். முதல் கணவரைப் பிரிந்த பாண்டிச்செல்வி, வெங்காய வியாபாரம் செய்து வந்த முத்துக்குமாரை இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். வெங்காய வியாபாரத்திற்காக முத்துக்குமாரும், பாண்டிச்செல்வியும் சேர்ந்து கந்துவட்டிக்குச் சுமார் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக தினமும் 2 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில வாரங்களாக வட்டி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சூலக்கரை அரசு பள்ளியில் படிக்கும் தனது மகன் பிரதீப்பை பள்ளி முடிந்ததும் அழைத்துச் சென்ற பாண்டிச்செல்வி, வீட்டிற்குச் செல்லும் வழியில் சூலக்கரை ரயில்வே கேட் அருகே நின்றுள்ளார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அம்ரித் பாரத் விரைவு ரயில் முன், மகனுடன் விழுந்து விட்டார். ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பாண்டிச்செல்வி தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கடனை அடைக்க முடியவில்லை என்றும், கடன் கொடுத்தவர்களின் பேச்சுகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், கடனுக்குப் பயந்து ஓடி ஒளிய முடியவில்லை என்றும், தனது மகளை மட்டும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கணவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து இந்த வீடியோவின் அடிப்படையில், கடன் கொடுத்தவர்கள் யார்? கந்துவட்டி கொடுமை நடந்ததா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கடன் பிரச்சினை தொடர்பாக தாய், மகன் உயிரிழந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





