“ஊகானில் 1290 பேர் கூடுதலாக உயிரிழப்பாம்!!” கொரோனா பலி எண்ணிக்கையில் திடீர் மாற்றம் செய்த சீனா..! டிரம்ப் குற்றச்சாட்டு உண்மையாகிறது!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையை திடீரென ஒரே நாளில் 50 சதவீத அளவுக்கு உயர்த்தி புதுக் கணக்கை அந்நாடு காட்டியிருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா விவகாரத்தில் சீனா பல்வேறு உண்மைகளை மறைத்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந் நிலையில், சீனா திடீரென இப்படி பலி எண்ணிக்கையை கூடுதலாக காட்டியிருப்பது டிரம்ப்பின் குற்றச்சாட்டு உண்மைதான் என நிரூபணமாகியுள்ளது என்றே கூறப்படுகிறது.

 

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் ஊகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் ஊகான் நகரில் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.ஆனால் உயிரிழப்பு பற்றி சீனா சொன்னது தான் கணக்காக இருந்தது.கிட்டத்தட்ட 2 மாதங்களாக போராடிய சீனா, கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது.

 

ஆனால் இந்த கொரானேவுக்கு ஒட்டு மொத்தமாக சீனாவில் பலியானவர்கள் 3300 பேர் மட்டுமே என அந்நாடு அறிவித்தது. இதில் ஊகான் நகரில் மட்டும் 2579 பேர் என்றும் பட்டியல் வெளியிட்டது சீனா. மேலும் சீனாவில் கொரோனா பிரச்னை ஓய்ந்து, சகஜ நிலைக்கு திரும்பி விட்டதாகவும் காட்டிக் கொண்டது.மக்களும் ஜாலியாக வெளியே சுற்றத் தொடங்கி விட்டதாகவும் கூறி வருகிறது.

 

சீனாவில் ஆட்டத்தை முடித்த கொரோனா, உலகின் பெரும் பகுதி நாடுகளை இப்போது சின்னாபின்னமாக்கி வருகிறது. இதில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பணக்கார நாடுகளில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்திய கொரோனா, இப்போது உலகின் மிகப் பெரும் வல்லரசான அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா தான் டாப் லிஸ்டில் உள்ளது.

இதனால்,சீனாவை விட்டு பிற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவைத்தான் சந்தேகக் கண்ணோடு குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசுக்கு சீன வைரஸ் என்றே பெயர் சூட்டிய டிரம்ப், சீனா பல்வேறு உண்மைகளை மறைக்காது; வெளிப்படைத் தன்மை இல்லை. பலி எண்ணிக்கையையும் குறைவாக காட்டுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அது மட்டுமின்றி, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பின் மீதும் பழி போட்டு, அந்த அமைப்புக்கான நிதியுதவியையும் நிறுத்துவதாக 2 நாட்களுக்கு முன் டிரம்ப் அறிவித்தார்.

 

இந்நிலையில் தான், ஊகான் நகரில் பலியானோர் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி இன்று சீனா புது கணக்கை காட்டியுள்ளது. முதலில் சீனா காட்டிய கணக்கு 2579 மட்டுமே. இன்றோ 1290 பேரின் கணக்கு விடுபட்டதாக கூறி 3869 பேர் இறந்ததாகவும், சீனாவில் மொத்த உயிரிழப்பு 4632 என புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. வீடுகளில் இறந்தோர் பற்றிய கணக்கை சரியாக எடுக்காமல் விட்டு விட்டோம். இப்போது தான் இறந்தோர் பற்றிய முழு கணக்கும் எடுக்கப்பட்டுள்ளது என சீனா புதுக் காரணமும் கூறியுள்ளது.

 

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப் பின், சீனா இப்படி பலி எண்ணிக்கையில் திடீர் பல்டி அடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் , சீனா மீது டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே சீனா இப்போது வெளியிட்டுள்ள இந்த புதிய இறப்பு பட்டியலுக்கு டிரம்ப் என்ன ரியாக்ஷன் காட்டப் போகிறாரோ? என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


Leave a Reply